திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பவித்ர உற்சவம் நிறைவு
திருக்குறுங்குடி; திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் 9 நாட்கள் நடந்து வந்த பவித்ர உற்சவம் நேற்று நிறைவடைந்தது. கைசிக விருத்தாந்த ஸ்தலமாக திகழும் அழகிய நம்பிராயர் கோயிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் 9 நாட்கள் பவித்ர உற்சவம் நடைபெறும். அதன் படி கடந்த 15ம் தேதி காலை உற்சவம் துவங்கியது. உற்சவ நாட்களில் நாள்தோறும் காலை விஸ்ரூப தரிசனம், பவித்ர உற்சவ சயனம், திருமஞ்சனம், திருவாராதனம், ரக்சாபந்தன், பவித்ர மாலை சாத்துதல், கோஷ்டி நடந்தது. மாலையில் ஜீயர்முன்னிலையில் கோயில் உள் பிரகாரத்தில் பெருமாள் புறப்பாடாகி சுக்ரவார குறட்டில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று சாற்று முறை ஆழ்வார்களுக்கு மரியாதை, ஜீயருக்கு பவித்ர மாலை அணிவித்தல் தொடர்ந்து பக்தர்களுக்கு மந்திரா அட்சதை, பவித்ர மாலை வழங்கப்பட்டு உற்சவம் நிறைவடைந்தது. ஏற்பாடுகளை ஜீயர் மடம் பவர் ஏஜன்ட் பரமசிவன் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.