ராமேஸ்வரம் கோயிலில் பர்வதவர்த்தினி அம்மனுக்கு காப்புகட்டுடன் நவராத்திரி விழா துவங்கியது
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பர்வதவர்த்தினி அம்மனுக்கு நவராத்திரி விழா காப்புகட்டி விழா துவங்கியது.ராமேஸ்வரம் கோயிலில் நவராத்திரி விழாவுக்காக நேற்று இரவு 8:30 மணிக்கு அம்மனுக்கு கோயில் குருக்கள் மகா தீபாராதனை நடத்தி, காப்பு கட்டினர். இதில் கோயில் இணை ஆணையர் சிவராம்குமார், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். முதல் நாள் விழாவான இன்று (அக்., 3ல்) பர்வதவர்த்தினி அம்மன் பசிபிணியை நீக்கும் அன்னபூரணி அலங்காரத்தில் காட்சியளிப்பார். நாளை நிறைநிலை திருமகள் மகாலட்சுமி, அக்., 5ல் கூற்று கொற்றவை திருக்கோலம் சிவதுர்க்கை, அக்., 6ல் கலைமகள் சரஸ்வதி, அக்.,7ல் முதல் அக்.,11 வரை கவுரி சிவபூஜை, சாரதாம்பிகை, கஜலட்சுமி, மகிஷாசூரவர்த்தினி, துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். நவராத்திரி நிறைவு விழாவான விஜயதசமி (அக்., 12) அன்று வன்னி நோம்பு திடலில் பர்வதவர்த்தினி அம்மன் அம்பு எய்து அரக்கனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.