கூடலூரில் ஐயப்ப பக்தர்களுக்கு மண்டல பூஜை வரை தினமும் அன்னதானம்
கூடலூர்; கூடலூர் வழியாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும், ஐயப்ப பக்தர்களுக்காக, கூடலூர் முனீஸ்வரன் கோவிலில் அன்னதானம் திட்டம் துவங்கி நடந்து வருகிறது.
கேரளா மாநிலம், சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து சென்று வருகின்றனர். நீலகிரி மாவட்டம், கர்நாடகா, ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநில பக்தர்கள் கூடலூர், குருவாயூர் வழியாக சபரிமலைக்கு சென்று வருகின்றனர். உள்ளூர் ஐயப்ப பக்தர்கள் மற்றும் கூடலூர் வழியாக பயணிக்கும் வெளி மாநில ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக கூடலூர் புதிய பஸ் ஸ்டாண்ட் மைசூரு சாலையில் உள்ள சக்தி முனீஸ்வரர் கோவிலில் அன்னதானம் திட்டத்தை துவங்கி செயல்படுத்தி வருகின்றனர். நடப்பாண்டுக்கான திட்டம் கடந்த வாரம் துவங்கி நடந்து வருகிறது. நீண்ட தூரம் பயணித்து வரும் வெளி மாநில ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதான திட்டம் பயனுள்ளதாக அமைந்துள்ளது. திட்டத்தின் நிர்வாகிகள் கூறுகையில், உள்ளூர் ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன், அன்னதானம் திட்டம் செயல்படுத்தி வருகிறோம். இத்திட்டம் மண்டல பூஜை வரை நடைபெறும் என, கூறினர்.