திருவாடானை கோயில் கோபுரத்தில் வளர்ந்த மரங்களால் பக்தர்கள் கவலை
திருவாடானை; திருவாடானை கோயில் கோபுரத்தில் மரம், செடி கொடிகள் வளர்வதால் அழகிய சிற்பங்கள் சேதமடைந்துள்ளன.திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முன்பு ராஜகோபுரம் உள்ளது. அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கும் இக்கோபுரத்தில் ஆங்காங்கே மரங்கள், செடி கொடிகள் வளர்கிறது. இது குறித்து பக்தர்கள் கூறியதாவது: ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் பிரதான நுழைவு வாயிலில் உள்ள ராஜகோபுரம் சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து தெளிவாக தரிசிக்க கூடிய அமைப்பை பெற்றுள்ளது. இந்த கோபுரத்தில் தற்போது நிறைய மரக்கன்றுகள், செடிகள் முளைத்துள்ளன. இதனால் கோபுரத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த ஆண்டு செடிகள் முளைத்த போது சிற்பங்கள் உடைந்து கீழே விழுந்தன. அதனை தொடர்ந்து செடிகள் உடனடியாக அகற்றப்பட்டது.தற்போது மீண்டும் வளர்வதால் சிற்பங்கள் பாதிக்கப்படும். ஆகவே செடிகளை அகற்ற நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.