மார்கழி மாதம்; பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, பஜனை
பெ.நா.பாளையம்; மார்கழி மாதத்தை ஒட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன.
சின்னதடாகம் புதூரில் உள்ள ஸ்ரீ சக்தி சித்த செல்வ விநாயகர் கோவிலில் மார்கழி மாத முதல் நாள் நிகழ்ச்சியை ஒட்டி நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, பஜனை ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் சக்தி சித்த செல்வ விநாயகர் கோவில் வளாகத்தை வந்து அடைந்தது. ஆண்டாள் பாசுரம் பாடிய பின்பு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல பெரியநாயக்கன்பாளையம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள், பஜனை ஊர்வலம் நடந்தது. ஆண்டாள் தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும், பாலமலை ரங்கநாதர் கோவில், நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், நாயக்கன்பாளையம் கரி வரதராஜ பெருமாள் கோவில், நாயக்கனூர் லட்சுமி நரசிங்க பெருமாள், இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாதர் பெருமாள், ராவத்துக்கொல்லனூர் உலகளந்த பெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.