வடபழனி கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED :287 days ago
வடபழனி; சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு, நேற்று நள்ளிரவு 12:15 மணியளவில் தொடர்பு கொண்ட மர்ம நபர், வடபழனி முருகன் கோவிலில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி இணைப்பை துண்டித்தார்.
இது குறித்து, தேனாம்பேட்டை உதவி கமிஷனர் ஆரோக்கிய ரவீந்தரன் மற்றும் வடபழனி குற்றப்பிரிவு ஆய்வாளர் அமுதா ஆகியோர் விசாரித்தனர். மேலும், மோப்ப நாய் பைரவா மற்றும் வெடிகுண்டு தடுப்பு போலீசார், விடிய விடிய கோவிலை சுற்றி சோதனை மேற்கொண்டனர். அதிகாலை 4:00 மணிக்கு கோவில் திறக்கப்பட்டவுடன், உள்ளே சென்று சோதனை மேற்கொண்டனர். 4:30 மணியளவில் சோதனை முடிந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து, வடபழனி போலீசார் விசாரிக்கின்றனர். இதையடுத்து, கோவிலில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.