திருநாகேஸ்வரத்தில் ராகு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு!
கும்பகோணம்: திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில், ராகு பெயர்ச்சி விழாவையொட்டி, ராகு பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடந்தது. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில், தமிழக நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகு ஸ்தலம், கிரிகுஜாம்பிகை உடனாய நாகநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு தனி சன்னிதியில் ராகு பகவான் நாககன்னி, நாகவள்ளி தேவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். ராகு காலத்தில், இங்குள்ள ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு. சிறப்புமிக்க இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா சிறப்பாக நடக்கும். நேற்று காலை, ராகு பகவான் விருச்சிக ராசியிலிருந்து, துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைவதையொட்டி, சிறப்பாக புனிதநீரால் அபிஷேகம் நடந்தது. 10:53 மணிக்கு, மஹா தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தன.இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ராகு பகவானை தரிசனம் செய்தனர்.