ஊருக்கு உதவிய மகானுக்கு நன்றி குருபூஜை; 84வது ஆண்டாக நடத்திய கிராமத்தினர்
வடமதுரை; வடமதுரை அருகே கா. புதுப்பட்டியில் தங்கி மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்த மதுரை மகானுக்கு நன்றி கடனாக திருவிழா போல கிராமத்தினர் 84வது குருபூஜையை நடத்தினர்.மதுரை மாவட்டம் அழகர்கோவில் அடுத்த பில்லிச்சேரியில் 1874ல் பிறந்தவர் சபாபதி. தனது 16வது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி வடமாநிலத்திற்கு சென்றார். அங்குள்ள திருத்தலங்களை தரிசித்துவிட்டு வடமதுரையில் சில ஆண்டுகள் தங்கினார். பின்னர் காணப்பாடி கிராமம் புதுப்பட்டியில் கள்ளிமரத்தடியில் தங்கிய அவர் மீது மட்டும் மழை நீர் பெய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் ஏதோ மகத்துவம் இருப்பதாக எண்ணி பக்தி கொண்ட மக்கள், ‘கள்ளியடி சுவாமிகள்’ அழைத்தனர். கிராமத்தில் தங்கி கிராம நலனுக்காக பல நல்ல காரியங்களை செய்த அவர் 1941ம் ஆண்டு ஜன.21ல் மகாசமாதி அடைந்தார். அவரது நினைவாக இங்கு கோயில் கட்டியுள்ள கிராம மக்கள், ஆண்டுதோறும் இறந்த நாளின் நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு குரு பூஜை விழா நடத்துகின்றனர். இன்று 84வது ஆண்டாக நடந்த குரு பூஜையில் காலை பால்குட ஊர்வலம் நடந்தது. பின்னர் 3500 கிலோ அரிசி, 260 கிலோ நிலக்கடலை பருப்பு, 525 கிலோ நல்எண்ணெய், 400 கிலோ புளி கொண்டு மெகா புளியோதரை பிரசாதம் தயாரிக்கப்பட்டது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமியை வழிப்பட்ட பின்னர் கிராம மந்தையில் வரிசையில் அமர்ந்தனர். கிராம இளைஞர்கள் இலை வழங்கி பின்னர் புளியோதரை பிரசாதம் வழங்கினர். அனைவருக்கும் பிரசாதம் கிடைத்ததும் ‘அரோகரா’ கோஷத்துடன் கலைந்தனர்.