உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலம்

காளஹஸ்தி சிவன் கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலம்

காளஹஸ்தி; தென் கைலாசம் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்திவர் கோயிலில் மகாசிவராத்திரி பிரம்மோத்சவத்தின் ஒரு பகுதியாக  தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.


திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் மகாசிவராத்திரி வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 7-வது நாள்  காலையில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர சுவாமி, ஞானபிரசுனாம்பிகை தாயாரின்  தேர் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.  தேர் திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.


முன்னதாக சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட தேரில் காலை 10 மணிக்கு சர்வ அலங்காரத்துடன் ஸ்ரீ காளஹஸ்திஷ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்திலிருந்து  புறப்பட்டு பிக்ஷால (முதல்) கோபுரத்திற்கு முன்னால் உள்ள நெப்பல மண்டபத்தை அடைந்தனர்.  அங்கு கோயில் வேதப் பண்டிதர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் ஒரு தேரில், கங்கா தேவி சமேதராக ஸ்ரீ ஸ்ரீ காளஹஸ்திஷ்வரரும், மற்றொரு தேரில்,  ஞானப்ரசுனாம்பா தேவியும் எழுந்தருளினர். வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க சாஸ்திரப் பூர்வமாக  ஸ்ரீ காளஹஸ்தி பகவானுக்கும்,  ஞானப்ரசுனாம்பா தேவிக்கும் சிறப்பு பூஜைகள் செய்தனர்.  தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடிக்க தேர் புறப்பட்டது. முதலில் சுவாமியின் தேர் தெருவீதி, நேருவீதி, மற்றும் நகரிவீதி வழியாக பேரிவாரி மண்டபம் சென்றது.  தொடர்ந்து ஞானப் பிரசுனாம்பிகை தேவியின் தேரும் முன்னோக்கி நகர்த்தப்பட்டது. பக்தர்கள், ஞானம் பெற்ற தேவியான ஞானப் பிரசுனாம்பாவைப் புகழ்ந்து தேரை முன்னோக்கி இழுத்தனர். தேவியின் தேர் கோயில் திருமண மண்டபம் வரைச் சென்று சிறிது நேரம் அங்கேயே நிறுத்தப்பட்டது.  இந்த விழாக்களைக் காண ஸ்ரீ காளஹஸ்தி  அதன் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும், பல  நகரங்களிலிருந்தும் பக்தர்கள் திரண்டதால், நான்கு மாட வீதிகளும் பக்தர்களால் நிரம்பி வழிந்தன.  நூற்றுக்கணக்கான பக்தர்கள் தெருக்களில் உள்ள மேல் மாடிகளில் இருந்து தேர் திருவிழாவை கண்டு பக்தி பரவசம் அடைந்தனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் தேர் திருவிழாவில் பங்கேற்றனர்.  இதற்கிடையில், தேர் திருவிழாவின் போது, ​​போலீசார் 900 பேர் கொண்ட சிறப்பு பாதுகாப்பு படையை அமைத்து கண்காணித்து வந்தனர்.  பக்தர்களிடையே கூட்ட நெரிசலைத் தடுக்க முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டன. தேர் திருவிழாவின் போது, ​​தெலுங்கு கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பக்தர்களைக் கவர்ந்தன. இந்த தேர் திருவிழாவில் ஸ்ரீகாளஹஸ்தி சட்டமன்ற உறுப்பினர் பொஜ்ஜல. சுதிர் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் கோயில் செயல் அதிகாரி பாபிராஜு மற்றும் அதிகாரிகள், மற்றும் பாஜக மாநில செயலாளர் கோலா. ஆனந்த்  பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !