அவிநாசி லிங்கேஸ்வரர் திருமேனி மீது சூரிய கதிர் ஒளிகள் படும் அற்புத நிகழ்வு
அவிநாசி; அவிநாசி கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அற்புத காட்சியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கொங்கேழு சிவ ஸ்தலங்களில் முதன்மையானது,சுந்தரரால் பாடல் பெற்ற சிறப்புடையதாக விளங்கும் ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று சூரிய கதிர் ஒளிகள் மூலவர் லிங்க திருமேனி விழும் அற்புத நிகழ்வு நடைபெற்றது. இக்கோவிலில் ஆண்டுதோறும் உத்தராயன காலமான மாசி மற்றும் பங்குனி மாதத்தில் அவிநாசி லிங்கேஸ்வரர் மீது சூரிய ஒளி விழும் அற்புத நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதில், இந்த ஆண்டுக்கான அற்புத நிகழ்வு நேற்று காலை 6.43 மணியளவில் மெல்ல மெல்ல சூரிய கதிர் ஒளிகள் பிரதான ராஜகோபுரம் வழியாக ஊடுருவி,கொடிமரம், பீடஸ்தம்பம் என வெளிச்சம் பரவியது. பின்னர் லிங்கேஸ்வரர் மூலவர் மீது ஒரு சில நொடிகள் பட்டு லிங்க திருமேனியாக பொன் நிறத்தில் ஜொலித்தார். இந்த அற்புத நிகழ்வை ஏராளமான பக்தர்கள் நமச்சிவாயா கோஷத்துடன் கண்டு பரவசமடைந்தனர்.