திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பணிகள் விறு.... விறு..; ஜூலை 16ல் கும்பாபிஷேகம்
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் உபகோயிலில் கும்பாபிஷேக பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில்களுக்கான கும்பாபிஷேக பணிகள் துவங்கும் வகையில் பிப். 10ல் பாலாலயம் நடந்தது. உப கோயில்களான சொக்கநாதர் கோயில், பழனி ஆண்டவர் கோயில், பாம்பலம்மன் கோயில், அங்காள பரமேஸ்வரி குருநாதசுவாமி கோயில், காசி விசுவநாதர் கோயில்களின் கும்பாபிஷேக பணிகளை அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணிச் செல்வம், பொம்மதேவன், சண்முகசுந்தரம், ராமையா சொந்த செலவில் செய்து வருகின்றனர். உபகோயில்கள் விமானங்களில் மராமத்து பணிகள் முடிந்து வர்ணம் தீட்டப்படுகிறது. சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுரத்தில் மராமத்து பணிகளுக்காக மூங்கில் சாரங்கள் அமைக்கப்படுகிறது. மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள் சன்னதிகளில் திருப்பணிகள் துவங்கும் வகையில் விரைவில் பாலாலயம் நடக்க உள்ளது.
ஜூலை 16ல் கும்பாபிஷேகம்; சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் ராஜன் செல்லப்பா, மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் உரிய காலத்தில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். இக்கோயிலுக்கு அறிவிக்கப்பட்ட ரோப்கார் சேவை போதிய நிதி ஒதுக்கப்படாத காரணத்தினால் அத்திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை என பேசினார்.
இதற்கு பதில் அளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஜூலை மாதம் 16ம் தேதி மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.