உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மடிப்பாக்கம் அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்

மடிப்பாக்கம் அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்

சென்னை; மடிப்பாக்கத்தில், 1978 ஜூன் 6ல், அய்யப்பன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. சபரிமலைக்குப் பிறகு, 18 புனித படிகளின் மேல் அய்யப்பன் அமர்ந்திருக்கும் முதல் கோவில், மடிப்பாக்கம் அய்யப்பன் கோவில். கடந்த ஆண்டு மார்ச்சில், கோவில் புனரமைப்புக்கான பாலாலயம் நடந்தது. பழைய கோவில் முழுதும் அகற்றப்பட்டு, புதிய கோவில் அமைக்கும் திருப்பணி முடிந்தது. இதைத் தொடர்ந்து கும்பாபிேஷக ஏற்பாடுகள் நடந்தன. கும்பாபிஷேக நாளான நேற்று காலை அஷ்ட திரவிய கணபதி ஹோமம், மரப்பாணி, பிம்பங்களும் கலசங்களும் யாகசாலையில் இருந்து கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. பின், கும்பநீர் கலசங்களின் மீது சேர்க்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. சபரிமலையின் பரம்பரை பூசாரிகளான செங்கன்னுார் தாழமன் மடம் கந்தாரு மோகனாரு தந்திரி, மகேஷ் தந்திரி ஆகியோரால் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பந்தள மகாராஜா குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அய்யப்பனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !