முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் சிறப்பு மிக்கது. குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. குறிஞ்சிக்கடவுளாகக் குமரன் முருகனே மலைகளின் மீது ஆட்சி செய்கிறார். தெய்வங்களின் உயர்ந்தவராகத் திகழ்வதால் அவரைத் தெய்வசிகாமணி என்று போற்றுவர். கந்தனைக் கரம் குவித்து வணங்குவோருக்கு கலியின் கொடுமையும், காலபயமும் கிடையாது என்று வடமொழி ஸ்காந்தம் குறிப்பிடுகிறது. முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் முக்கியமானது கார்த்திகை விரதம். கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர் கந்த பெருமான். கார்த்திகையில் கந்தனை வழிபட துன்பம், கடன் தொல்லை நீங்கும். முருகன் கோயில்களில் விளக்கேற்றி வழிபட வேண்டும். அரோகரா சொல்லி ஆறுமுகனை வழிபட அனைத்தும் கிடைக்கும். இன்று கார்த்திகையில் முருகனை வணங்கி நற்பலன் பெறுவோம்.சந்திர தரிசனமான இன்று மூன்றாம் பிறையை தரிசிப்பது சிறப்பாகும். சந்திரனே மனதிற்கும் உடலுக்கும் அதிபதி. மனக்கஷ்டங்கள் நீங்கி, ஆயுள் விருத்தி, செல்வ செழிப்பு உண்டாக இன்று சந்திர தரிசனம் (மூன்றாம் பிறை) செய்வது சிறப்பாகும். சிவன் தன் தலையின் வலப்பக்கம் பிறைச்சந்திரனுக்கு இடம் கொடுத்துள்ளார். அமாவாசைக்கு மறுநாளில் இருந்து சந்திரன் வளரும். மூன்றாம் நாளில் தெளிவாக தெரியும். நான்காம் நாளில் இருந்து சந்திரனின் மீது நிழல் விழுவதால், களங்கம் அடைவதாக சொல்வர். மனதில் களங்கம் இல்லாத துாய பக்தி கொண்டவர்களை சிவன், தன் தலையில் வைத்துக் கொண்டாடுவார் என்பதை இதன் மூலம் உணர்த்துகிறார். ஆகவே மூன்றாம் பிறை பார்ப்பது நல்லது. மூன்றாம் பிறை பார்க்க முடியாவிட்டால் வீட்டில் சிவ வழிபாடு செய்வதும், சிவன் தலையில் இருக்கும் சந்திரனை இன்று மாலை தரிசனம் செய்வது சிறப்பு.