ஏர்வாடி தர்காவில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா கோலாகலம்; வெள்ளி குடங்களிலிருந்து சந்தனம் பூசப்பட்டது
கீழக்கரை; ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா கோலாகலமாக நடந்தது. ஏர்வாடியில் அல் குத்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் பாதுஷா நாயகம் ஒலியுல்லாஹ் தர்கா உள்ளது. இங்கு 851ம் ஆண்டு உரூஸ் என்னும் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா கடந்த ஏப். 29ல் துவங்கியது. மவுலீது எனப்படும் புகழ் மாலை தொடர்ந்து 23 நாட்களுக்கு மாலை 6:30 முதல் இரவு 10:30 மணி வரை ஓதப்பட்டு வந்தது. மே 9 அன்று 80 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பத்தில் பச்சை வண்ண பிறை கொடி ஏற்றப்பட்டது. முதல் தரம் வாய்ந்த சந்தன கட்டைகளை வாங்கி பன்னீரில் ஊறவைத்து அவற்றை தொடர்ந்து 21 நாட்களுக்கு கற்களில் வைத்து தோய்த்தெடுக்கப்பட்டு வெள்ளிக் குடங்களில் சேகரித்து வைக்கப்பட்டன.
சந்தனக்கூடு விழா நேற்று மே 21 மாலை முதல் தொடர்ந்து இரவு முழுவதும் நடந்தது. இஸ்லாமிய மார்க்க அறிஞர்களால் மவுலீது ஓதப்பட்டது. மறுநாள் இன்று மே 22ல் 2 கி.மீ., தொலைவில் உள்ள ஏர்வாடியில் உள்ள முஜாகீர் நல்ல இப்ராகிம் தைக்காவில் இருந்து 11 நாட்டிய குதிரைகள் முன்னே செல்ல, மேள தாளங்கள் முழங்க, யானையின் மீது வண்ணப் போர்வைகளை கொண்டு வந்தனர். 40 அடி உயரம் கொண்ட மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ரதம் ஏராளமான யாத்திரீகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஊர்வலமாக வந்தது. ஏர்வாடி தர்கா நுழைவாயிலில் மூன்று வெள்ளி குடங்களில் நிரப்பப்பட்ட சந்தனங்களை மூன்று முறை வலம் வந்து, புனித மக்பராவின் மீது சந்தனம் பூசப்பட்டது. வண்ணப் போர்வைகள் போத்தப்பட்டு, மளிகைச் சரங்களால் அலங்கரிக்கப்பட்டு வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டன. இவ்விழாவை காண்பதற்காக பல்வேறு மாநிலங்கள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர்.போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையினர் செய்திருந்தனர். வருகிற மே 28 அன்று கொடி இறக்கம் செய்யப்பட்டு நெய்ச்சோறு வழங்கி விழா நிறைவடைகிறது.