கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் திருத்தேர் உற்சவம்
செஞ்சி; கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் நடந்த திருத்தேர் உற்சவத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.
செஞ்சி அடுத்த கீழ்மாம்பட்டு அம்மச்சாரம்மன், செல்வ விநாயகர், சீனிவாச பெருமாள் கோவில் 25 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, 16 ஆம் ஆண்டு திருத்தேர் விழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று மகா கணபதி ஹோமம், காப்பு கட்டுதல், சாகை வார்த்தல் மற்றும் பூங்கரகம் ஊர்வலம் நடந்தது. இரண்டாம் நாள் பால்குடம் ஊர்வலமும், 21ம் தேதி மாலை திருக்கல்யாணமும், 23ம் தேதி திருவிளக்கு பூஜையும், 24ம் தேதி பூ பல்லக்கு விழாவும் நடந்தது. நேற்று முக்கிய திருவிழாவான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு அம்மச்சார் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம் செய்திருந்தனர். காலை 8.30 மணிக்கு மகா தீபாரதனையுடன், அம்மனை தேரில் ஏற்றினர். 9 மணிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மூர்த்தி வடம் பிடித்து தேர்பவனியை துவக்கி வைத்தார். மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமார், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணதாஸ், வழக்கறிஞர் விஜய் மகேஷ், பா.ம.க., முன்னாள் மாவட்ட செயலாளர் மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர் கோபால் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி நடந்த போது பக்தர்கள் நாணயம், காய்கறி, பழங்களை தேரின் மீது வீசி எரிந்து நேர்த்திகடன் செலுத்தினர். விழாவை முன்னிட்டு ஏழு நாட்களாக தொடர் அன்னதானம் நடந்தது.