மதுராந்தகம் திருவெண்காட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் விமரிசை
ADDED :236 days ago
மதுராந்தகம்; மதுராந்தகத்தில், 1,000 ஆண்டுகள் பழமையான மீனாட்சி அம்மன் சமேத திருவெண்காட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நிறைவுற்று, ஆறாம் ஆண்டு வைகாசி விசாக பிரமோத்சவ பெருவிழா, வரும் 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பின், அதிகார நந்தி சேவை, திருக்கல்யாணம் மற்றும் ஆறாம் நாள் நிகழ்வாக, யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. முக்கிய நிகழ்வான ஏழாம் நாள், திருத்தேரில் மீனாட்சியம்மாள் சமேத திருவெண்காட்டீஸ்வரர் எழுந்தருளி, கோவிலின் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தேர் வடம் பிடித்து இழுத்து, சுவாமியை தரிசனம் செய்தனர். அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.