கிறிஸ்துமஸ் சிந்தனை3: சுமையை இறக்கி வைப்போம்!
புன்னகை தவழும் உதடுகளால் பிறரிடம் சிரித்து பேசிவிட்டு, உள்ளத்தில் வக்கிரமான எண்ணங்களுடன் வலம் வருபவர்களை அடையாளம் கண்டுகொள்வது அவ்வளவு எளிதானதல்ல. ஒருவரது நடத்தை கண்ணியமிக்கதாக, பிறர் மதிக்கத்தக்கதாக, பாராட்டிற்குரியதாக பிறர்பார்வையில் இருந்தாலும், மாசுபட்ட உள்ளம், என்றாவது ஒருநாள் அவரைக் களங்கப்படுத்தி விடும்.""நான் உங்களுக்கு சொல்கிறேன். ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கனவே அப்பெண்ணோடு விபச்சாரம் செய்தாயிற்று, என்பதை ஆணித்தரமாக, அழுத்தம், திருத்தமாக வலியுறுத்தியவர் இயேசுநாதர். இதுபோன்ற அலைபாயும் உள்ளங்களை, ஆன்மிக சிந்தனையால் மட்டுமே அடக்கி வைக்க முடியும். அதனால்தான், தேவாலயத்தின் கதவுகள் எப்போதும் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. "என்னோடு உறவாட வா என்று இரண்டு கைகளையும் விரித்து, இயேசு அழைக்கும் காட்சியை அங்கு காணலாம். சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே! என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதலைத் தருவேன், என்ற இயேசுவின் அழைப்பில் ஏராளமான அர்த்தங்கள் அடங்கியுள்ளன. உடலாலும், உள்ளத்தாலும் தாங்கிக்கொள்ள முடியாத சுமைகளை, சோகங்களை, வேதனைகளை, வெறுப்புகளை இறக்கி வைக்கும் இடமாக ஆலயங்கள் திகழ்கின்றன. எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் இறைவனிடம் உறவாடுவோம். உடலிலும், உள்ளத்திலும் தூய்மையை பேணுவோம்.