உலகிலேயே மிகப்பெரிய பஞ்சலோக சிலைகள்; 27ல் மகாதேவர் மலையில் பிரதிஷ்டை
சேலம்; சேலம், கன்னங்குறிச்சியைச் சேர்ந்த சிற்பி, ஸ்தபதி ராஜா, 66; பஞ்சலோக சிலை மற்றும் பழமையான கோவில்களை புனரமைக்கும் பணி செய்வதுடன், பாலமுருகன் சிற்ப கலைக்கூடத்தையும் நடத்தி வருகிறார். இவர் தலைமையில், 25 சிற்பிகள் இரு ஆண்டுகளாக, ஐந்து டன் எடையில், 18 அடி உயர நடராஜர், 16 அடி உயர சிவாம்பிகை சிலைகளை உருவாக்கியுள்ளனர்.இதுகுறித்து சிற்பி ராஜா கூறியதாவது: சிவாம்பிகா சமேத நடராஜர் சிலை, பஞ்சலோக சிலைகளில் உலகிலேயே இதுதான் பெரியது. நடராஜர் சிலை, தலை முதல் பாதம் வரை, 13 அடி ஏழு இன்ச், பீடம், நான்கு அடி எட்டு இன்ச் என, 18 அடி உயரத்தில் பஞ்சலோகத்தால் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், 16 அடி உயர சிவாம்பிகை சிலை, மூன்றரை அடி உயரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள், இரு அடி உயரத்தில் விநாயகர், முருகன், பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள், காரைக்கால் அம்மையார், நந்திதேவர், காமதேனு, மகா மேரு, அப்பர், சுந்தரரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், இரண்டு தீப லட்சுமிகள் என, மொத்தம், 19 சிலைகள், 25க்கும் மேற்பட்ட சிற்பிகளால் ஆகம முறைப்படி இரண்டாண்டுகளில் தயாரித்துள்ளோம். பஞ்சலோக நடராஜர் – சிவாம்பிகா சிலை வரும், 27ல் வேலுார் மாவட்டம் குடியாத்தம் அருகே மகாதேவர் மலையில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.