சிவலிங்கம் உடைப்பு; துடியலூர் அருகே பரபரப்பு
ADDED :111 days ago
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே அரச மரத்தடியில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கம் உடைக்கப்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. துடியலூர் ரயில்வே ஸ்டேஷன் ரோடு, அரவான் திடலில் விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலின் அருகே அரச மரத்தடியில் சிவலிங்கம் உள்ளது. தினசரி காலை பக்தர்கள் சிவலிங்கத்தை தரிசனம் செய்து பூஜிப்பது வழக்கம். இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள், சிவலிங்கம் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கோயில் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஹிந்து முன்னணி துடியலூர் நகர துணை தலைவர் விஜய்குமார், துடியலூர் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்தில் துடியலூர் இன்ஸ்பெக்டர் லதா உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர்.