உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனுாரில் குவிந்த 2 லட்சம் பக்தர்கள்; அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் பரவசம்

மேல்மலையனுாரில் குவிந்த 2 லட்சம் பக்தர்கள்; அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் பரவசம்

செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இரவு 12 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஆடி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.


மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த ஆடி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு ஆடி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க காப்பு அலங்காரம் செய்தனர். இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். மகா தீபாராதனையுடன் ஊஞ்சல் உற்சவம் துவங்கி, இரவு 12 மணி வரை நடந்தது. கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் தாலாட்டு பாடல்களை பாடினர். பக்தர்கள் கற்பூர தீபமேற்றி வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் சேட்டு என்கிற ஏழுமலை மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். விழுப்புரம் எஸ்.பி., சரவணன் தலைமையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., உமா பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். நேற்று ஆடி அமாவாசை என்பதால் தமிழகம் முழுவதும் இருந்து 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்திருந்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, வேலூர் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !