அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
மதுரை; அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வேத மந்திரங்கள் முழங்க, தங்கக் கொடிமரத்தில் கருடாழ்வார் கொடி ஏற்றப்பட்டது.
அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா இன்று (ஆக. 1) காலை 9:15 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் தங்கக் கொடிமரத்தில் கருடாழ்வார் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டு விழா துவங்கிறது. வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர், விழாவில் ஆக. 5 காலை 8:40 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் சிவகங்கை சமஸ்தானம் மறவர் மண்டபத்திற்கு கள்ளழகர் தங்கப் பல்லக்கில் எழுந்தருள்கிறார். ஆக. 8ல் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருள்கிறார். ஆக. 9ல் காலை 8:40 மணிக்கு மேல் 8:55 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. கிராமங்களில் இருந்து 2 நாட்கள் முன்பே பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டிகளில் வந்து கோயில் வளாகத்தில் தங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர்.ஆக. 10ல் உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவடைகிறது.
அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி சன்னதி கதவுகள் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதபவுர்ணமி தினத்தன்றுமட்டும் மாலை திறக்கப்பட்டு, 18 படிகளுக்கும் படிப்பூஜை செய்து தீபாராதனை காட்டப்படும். பின் கதவுகளுக்கு சந்தனம் சாத்தும் நிகழ்வு நடைபெறும். இந்தாண்டு ஆக. 9 மாலை அந்நிகழ்வு நடக்கிறது. முன்னதாக ஜூலை 24ல் ஆடி அமாவாசையை முன்னிட்டு இரவு 7:15 மணிக்கு மேல் 8:00 மணிக்குள் கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருள்கிறார்.