ஆடி இருபத்தெட்டாம் பெருக்கு; தங்க பல்லக்கில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு
திருச்சி; ஆடி இருபத்தெட்டாம் பெருக்கை முன்னிட்டு தங்க பல்லக்கில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், ஆடி, 18ம் தேதி ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, காவிரி தாயாருக்கு மாலை சமர்பித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல் ஆடி இருபத்தெட்டாம் பெருக்கை முன்னிட்டு இன்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தங்க பல்லக்கில் புறப்பட்டு, வழிநடை உபயங்கள் கண்டருளி அம்மாமண்டபம் ஆஸ்தான மண்டபம் சேர்ந்தார். தொடர்ந்து ஸ்ரீநம்பெருமாள் அலங்காரம் அமுது செய்தல், காவேரித் தாயாருக்கு மாலை சமர்ப்பித்தல் நடைபெற உள்ளது. இரவு, 8.30 மணிக்கு புறப்பட்டு, அம்மா மண்டபம் சாலை, திருவள்ளுவர் வீதி வழியே வெளி ஆண்டாள் சன்னதிக்குச் சென்று, அங்கு மாலை மாற்றிக் கொண்டு, இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். நம்பெருமாள் சுமார் 62 நாட்களுக்குப் பிறகு இன்று ஆடி 28ல் முதல் புறப்பாடு நடைபெறுவது குறிபிடத்தக்கது.