வீடுகளில் பூக்கோலமிட்டு, கோவிலுக்கு சென்று ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
கூடலூர்; கூடலூரில், வீடுகளில் பூக்கோலமிட்டும், கோவிலுக்கு சென்று கடவுளை தரிசித்தும் ஓணம் பண்டிகை கொண்டாடினார்.கேரளாவில் பாரம்பரிய மிக்க ஓணம் பண்டிகை அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை கேரள மட்டுமின்றி தமிழக பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் ஓணம் பண்டிகையை, கேரளா மன்னன் மகாபலி சக்கரவர்த்தி நினைவாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி, நடப்பாண்டு கேரள மட்டுமின்றி, தமிழகம் உள்ளிட்ட மலையாள மக்கள் வாழும் பிற மாநிலங்களில் இன்று ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடினர். கூடலூர் பகுதியில், வீடுகள் முன் பூ கோலமிட்டு, பாரம்பரியமான புத்தாடைகள் அணிந்து குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று கடவுளை தரிசித்து ஓணம் பண்டிகை கொண்டாடினார். வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசி பெற்றனர். ஓணம் பண்டிகை முன்னிட்டு, புத்தூர்வயல் ஸ்ரீ மகாவிஷ்ணு கோவில், மண்வயல் மாதேஸ்வரன் கோவில், நம்பளகோட்டை வேட்டைக்கொருமகன் கோவில், கல்லிங்கரை சிவன் கோவில், தேவர்சோலை சங்கரன்கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதில் ஏராளமான மக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.