பிரம்மோற்சவம்; தென் திருப்பதியில் தங்கத் தேரில் மலையப்ப சுவாமி வலம்
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் தென் திருப்பதி ஸ்ரீ வாரி ஆலயத்தில், பிரம்மோற்சவம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தங்க தேரில் ஸ்ரீ மலையப்ப சுவாமி வலம் வந்தார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தென் திருப்பதி ஸ்ரீ வாரி ஆலயத்தில், வருடாந்திர பிரம்மோற்சவம் நிகழ்ச்சி கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பெரிய சேஷ வாகனம், சின்ன சேஷ வாகனம், சிம்ம வாகனம், முத்து பந்தல் வாகனம், கல்ப விருட்ச வாகனம், சர்வ பூபால வாகனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின் நேற்று ஸ்ரீவல்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் மாலை சமர்ப்பித்தல் வைபவம் நடந்தது. தொடர்ந்து மலையப்ப சுவாமி மோகினி திருக்கோலத்தில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார். அவருடன் கிருஷ்ணரும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். இன்று வசந்த உற்சவம் நடந்தது. தொடர்ந்து தங்கத்தேரில் ஸ்ரீ மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாட்டினை அன்னூர் கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர் செய்திருந்தனர்.