உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடலூரில் வள்ளலார் வருவிக்க உற்ற நாள் விழா கோலாகலம்

வடலூரில் வள்ளலார் வருவிக்க உற்ற நாள் விழா கோலாகலம்

வடலூர்; வடலூரில் வள்ளலார் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது


கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை மூலம் சன்மார்க்க கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது. இங்கு வள்ளலாரின், 203 ஆம் ஆண்டு வருவிக்க உற்றநாள் (பிறந்தநாள்) விழா, நேற்று வடலூர், வள்ளலார் தெய்வ நிலையம் சார்பில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கடந்த, 28ம் தேதி தொடங்கி, 3 நாட்கள் தருமச்சாலையில் அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் பாராயணம் நடந்தது. கடந்த, 1ம் தேதி முதல், 4ம் தேதி வரை, 4 நாட்கள் ஞான சபையில் திருஅருட்பா முற்றோதல் நடைபெற்றது. நேற்று முன்தினம் சன்மார்க்க சொற்பொழிவு, திருஅருட்பா இன்னிசை நிகழ்ச்சி, கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வள்ளலார் பிறந்தநாள் விழாவான நேற்று காலை, 5:00 மணிக்கு, தருமச்சாலையில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், 7:30 மணிக்கு, சன்மார்க்க கொடி கட்டுதல் நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து நாள் முழுவதும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று காலை முதல், சத்திய ஞான சபையில் நடந்த பகல் பூஜை மற்றும், தருமச்சாலையில் ஏராளமான சன்மார்க்க அன்பர்கள், வள்ளலார் பக்தர்கள் வழிபாடு செய்து அன்னதான கூடத்தில் உணவு அருந்தி சென்றனர். விழாவையொட்டி வடலூர், வள்ளலார் தெய்வ நிலையம் சார்பில், செயல் அலுவலர் ராஜா சரவணகுமார் தலைமையிலான குழுவினர் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !