நாளை (அக்.22) கந்தசஷ்டி ஆரம்பம்; சஷ்டி நாயகன் முருகன் அருளால் எல்லா வரமும் பெறுவோம்!
சூரபத்மனால் தேவர்கள், “உங்களைப் போன்ற பலமுள்ள ஒரு இளைஞனை எங்களுக்கு தர வேண்டும்" என சிவபெருமானிடம் வேண்டினர். ஈசானம், தத்புருஷம், அகோரம், வாம தேவம், சத்யோஜாதம் என சிவனுக்கு ஐந்து முகங்கள் உண்டு. ஆனால் ஞானிகள் மட்டுமே வழிபடும் முகம் ஒன்று(அதோமுகம்) அவரது இதயத்தில் உள்ளது. கீழ் நோக்கிய அந்த அதோமுகத்தை வெளிப்படுத்தி ஆறுமுகமாக அவதரிக்கச் செய்தார். இதற்காக அவர் தன் நெற்றிக் கண்ணில் இருந்து தீப்பொறிகள் வரவழைத்தார். அக்னிபகவான் அவற்றை வாயுவிடம் அளித்தார். வாயு அதைத் தாங்க முடியாமல் சரவணப் பொய்கையில் சேர்த்திட தீப்பொறிகள் ஆறு குழந்தைகளாக மாறின. பார்வதி அவர்களை ஒன்றிணைக்க ஆறுமுகன் எனப் பெயர் பெற்றார். "கருணை கூர் முகங்கள் ஆறும் கரங்கள் பனிரெண்டும் கொண்டே ஒரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய" சிவன் வேறு, முருகன் வேறு அல்ல. இருவரும் ஒருவரே! சூரபத்மனை வதம் செய்த முருகன் அவனை சேவல், மயிலாக மாற்றினார். அவனது ஆணவத்தை அழித்ததும் சேவலை கொடியாகவும். மயில் வாகனமாகவும் ஏற்றுக் கொண்டார். இதை கோயில்களில் நினைவூட்டும் வகையில் சூரசம்ஹார நிகழ்ச்சி ஐப்பசி வளர்பிறையில் முதல் ஆறு நாள் நடக்கிறது. இது திருச்செந்துாரில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்று பழமொழி உண்டு. அதற்கு சஷ்டியில் விரதம் இருந்தால் அகமாகிய(உள்ளே) கருப்பையில் கரு தோன்றும் என்பது பொருள். எனவே சஷ்டி விரதம் இருந்தால் முருகனருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சஷ்டி என்பது ஆறாவது நாள். ஆறாம் எண்ணின் அதிபதி சுக்கிரன், சுக்கிரனின் அதி தேவதை மகாலட்சுமி. எனவே சஷ்டி விரதம் மூலம் பதினாறு வகையான பேறுகளை பெறலாம். பிரதமை முதல் சஷ்டி திதி வரை ஆறு நாளும் அதிகாலை எழுந்து சுந்தசஷ்டி கவசம். திருப்புகழ், கந்தானுபூதி, கந்தரலங்காரம் பாடுவது அவசியம். நாள் முழுவதும் விரதம் இருந்து இரவு பால், பழம் மட்டும் சாப்பிட வேண்டும். சூரசம்ஹாரத்தை தரிசித்து ஏழாம் நாள் காலையில் பூஜை செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். “இசை பயில் சடாச்சரம் அதனாலே இகபர சௌபாக்யம் அருள்வாயே" என்னும் திருப்புகழ் கூறுவது போல சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு எல்லா நன்மையும், நீண்ட ஆயுளும் கிடைக்கும். சஷ்டி நாயகன் முருகள் அருளால் எல்லா வரமும் பெறுவோம்.
மாமரமாக மாறியவன்
பார்வதிதேவி தாட்சாயினியாக அவதரித்த போது அவளுக்கு தந்தை ஆகும் பாக்கியம் பெற்றவன் தட்சன். ஆணவம் மிக்க அவன், மருமகன் சிவனையே அவமதித்தான். கடவுளை அவமதிப்பவர்களே மறுபிறவியில் அசுரர்களாக பிறந்து கடவுளால் தண்டிக்கப்படுவர். தட்சன் மறுபிறப்பில் பத்மாசுரன் என்னும் அசுரனாக பிறந்தான். அவனது சகோதரர்கள் கஜமுகாசுரன், சிங்கமுகன், பானுகோபனும் அதர்ம வழியில் வாழ்ந்தனர்.
இந்நிலையில் சிவன் தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை வெளியிடவே, அவை குழந்தைகளாக மாறின. கார்த்திகைப்பெண்கள் பாலுாட்டி சீராட்டி வளர்த்தனர். ஆறு குழந்தைகளையும் ஒன்று சேர்த்த பார்வதி, குழந்தைக்கு ‘ஆறுமுகன்’ என பெயரிட்டாள். நவவீரர்கள் என்னும் ஒன்பது வீர்ர்களுடன் இணைந்து போருக்கு தயாரானார். முதலில் பத்மாசுரனின் தம்பியரை அழித்தார். மாயையில் வல்ல பத்மாசுரன் மாமரமாக மாறி நின்றான். வேலினால் மரத்தை இருகூறாகக் பிளந்து, ஒரு பகுதியை சேவலாக்கி கொடியாகவும், மறு பகுதியை மயிலாக்கி வாகனமாகவும் ஏற்றுக்கொண்டார். இதன் அடிப்படையில் சூரசம்ஹாரத்தில் சேவலை பறக்க விடுவதோடு, சூரனின் தலைப்பகுதியில் மாவிலையைக் கட்டி வைப்பர். மாமரமாக மாறிய சூரனை வேலை ஏவி அழித்ததை நினைவுபடுத்தவே மாவிலை கட்டப்படுகிறது.
வெற்றி மீது வெற்றி
தந்தையான சிவனின் மறுவடிவமே முருகன். பாம்பன் சுவாமிகள் அறுமுகச்சிவனார் என்றே முருகனைக் குறிப்பிடுகிறார். தாயான பார்வதியும் முருகனை விட்டு அகலுவதில்லை. சூரபத்மனை வெல்ல போருக்கு புறப்பட்ட போது முருகன் தாயிடம் ஆசி பெறச் சென்றார். அப்போது பார்வதி தன் சக்தி எல்லாம் திரட்டி வேலாகத் தந்தாள். சக்திவேல் இல்லாமல் முருகனைக் காண முடியாது. அந்த சக்திவேல் தான் சூரசம்ஹாரத்தை வெற்றியுடன் முடித்தார் முருகன். அவரைச் சரணடைந்தால் வெற்றி மீது வெற்றி சேரும்.