மேஷம்: கார்த்திகை ராசி பலன்
அசுவினி
தெய்வ அருளும் திட சிந்தனையும் கொண்ட உங்களுக்கு கார்த்திகை மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். ஞான மோட்சக்காரகன் கேது பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களை நெருக்கடிக்கு ஆளாக்கலாம். உறவுகளுக்குள் பிரச்னைகளை அதிகரித்தாலும், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், சனியும் வருமானத்தை அதிகரிப்பர். முடங்கிக் கிடந்த தொழிலும் இனி முன்னேற்றம் அடையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். புதிய சொத்து, வாகனம் என வாங்கும் கனவு நனவாகும். நீண்ட நாளாக உங்களை வாட்டி வதைத்த சங்கடங்கள் மறையும். உங்கள் செல்வாக்கு உயரும். வேலைக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். வெளிநாட்டு தொடர்புகள் சாதகத்தை ஏற்படுத்தும். நவ.27 வரை உங்கள் சப்தமாதிபதி சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அதுவரை எதிர்பாலினரிடம் எச்சரிக்கையாக இருப்பது நன்மையாகும். உங்கள் வேலையில் மட்டும் கவனமாக இருப்பது இந்த நேரத்தில் மிக அவசியம். உங்கள் தொழிலில் எந்த அளவிற்கு அக்கறை செலுத்துகிறீர்களோ அந்த அளவிற்கு ஆதாயத்தை அடைய முடியும். ஞானக்காரகன் குரு வக்கிரம் அடைந்திருப்பதால் புதிய வேலைகளை கையில் எடுக்கும்போது பின்விளைவு பற்றி யோசித்து மேற்கொள்வது நல்லது. விவசாயிகள் விளைச்சலில் கவனமாக இருக்க வேண்டும். அரசு பணியாளர்கள் அதிகாரிகளின் ஆலோசனையின்படி செயல்படுவது நன்மை தரும்.
சந்திராஷ்டமம்: நவ. 20, 21
அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 25, 28. டிச. 7, 9
பரிகாரம் கணபதியை வழிபட குறை நீங்கும். நன்மை நடக்கும்.
பரணி
நினைத்ததை சாதிக்கும் அதிர்ஷ்டம் கொண்ட உங்களுக்கு, கார்த்திகை மகிழ்ச்சியான மாதமாகும். நவ. 27 வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன் நட்புகள் வழியே ஆதாயத்தையும் சந்தோஷத்தையும் உண்டாக்குவார். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். சிலருக்கு அந்நியரால் சில பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். ஆத்ம காரகன் சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அரசுவழி முயற்சிகளில் நிதானமும் கவனமும் தேவை. அரசியல்வாதிகள் தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்படுவது அவசியம். எந்தவொரு வேலையிலும் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவது உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும். ராசிநாதன் செவ்வாயும் டிச.6 வரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மனதில் இனம் புரியாத குழப்பமும் பயமும் இருக்கும். வேலையில் தடைகளும் தாமதமும் நெருக்கடியும் ஏற்படும். சிலருக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும் என்றாலும் அனைத்தையும் சமாளிக்கும் பலத்தை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும் ராகுவும் உண்டாக்குவர். தேவைக்கேற்ற வருமானம் வந்து கொண்டிருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள்.
சந்திராஷ்டமம்: நவ. 21, 22
அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 24, 27. டிச. 6, 9, 15
பரிகாரம் கோமதி அம்மனை வழிபட சங்கடம் விலகும். நினைப்பது நடக்கும்.
கார்த்திகை 1 ம் பாதம்
ஆத்ம பலமும் துணிவும் கொண்ட உங்களுக்கு, கார்த்திகை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் திடீர் நெருக்கடிகளை ஏற்படுத்துவார். மனதில் குழப்பம் அதிகரிக்கும். வேலைகளில் தடையும் தடுமாற்றமும் ஏற்படும். அரசுவழி முயற்சிகள் இழுபறியாகும். வேலையில் இருப்பவர்களுக்கு திடீர் இடமாற்றம். மேலதிகாரியின் அதிருப்தி என்ற நிலை ஏற்படும். டிச. 6 முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதன் உங்கள் தேவைகளை நிறைவேற்றுவார். மறைந்த புதன் நிறைந்த செல்வங்களை தருவார் என்ற சொல்லுக்கேற்ப பொருளாதார நிலை உயரும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். கலைஞர்கள், வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உறவினர் வழியில் ஆதாயம் அதிகரிக்கும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், ராகுவும் மாதம் முழுவதும் உங்களைப் பாதுகாப்பர். கடன் கொடுத்திருந்த பணம் பலமுறை கேட்டும் வராமல் இருந்த நிலையில் இந்த நேரத்தில் வீடு தேடி வரும். வியாபாரத்தில் முதலீட்டிற்கேற்ப ஆதாயம் உண்டாகும். சப்தம ஸ்தானத்தில் நவ. 27 வரை ஆட்சியாக சஞ்சரிக்கும் சுக்கிரன் சிலரை தடுமாற வைப்பார். அவசர வேலைகளிலும் ஈடுபட முடியாத அளவிற்கு நட்புகள் வழியே உங்கள் நிலையை மாற்றுவார் என்பதால் எதிர்பாலினரிடம் விலகி இருப்பது நல்லது. விவசாயிகள் மாதம் முழுவதும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
சந்திராஷ்டமம்: நவ. 22
அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 19, 27, 28. டிச. 1, 9, 10
பரிகாரம் சூரியனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும். நினைப்பது நடந்தேறும்.