கடகம் : கார்த்திகை ராசி பலன்
புனர்பூசம் 4 ம் பாதம்
எந்த ஒன்றிலும் பின்விளைவு பற்றி யோசித்து செயல்படும் உங்களுக்கு கார்த்திகை முன்னேற்றமான மாதம். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் குரு வக்கிரம் அடைந்திருப்பதால் முன்பிருந்த நெருக்கடி குறையும். எடுத்த வேலைகளை முடித்திடக் கூடிய நிலை உண்டாகும். உங்கள் ராசிக்கு பஞ்சமாதிபதியும், ஜீவனாதிபதியுமான செவ்வாய் 5 ம் இடத்தில் டிச.6 வரை ஆட்சியாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்ச நிலை உண்டாகும். நீண்ட நாள் விருப்பம் பூர்த்தியாகும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். டிச. 6 முதல் சத்ரு ஜெய ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். உங்கள் அந்தஸ்து உயரும். தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட போட்டிகள் பிரச்சனைகள் முடிவிற்குவரும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும் என்றாலும், அஷ்டம ஸ்தானத்தில் சனி ராகு சேர்க்கை பெற்றிருப்பதால் அனைத்திலும் கவனமும் நிதானமும் தேவை. உடல் ரீதியாகவோ, வாழ்க்கை ரீதியாகவோ ஒரு சிலருக்கு சங்கடங்கள் ஏற்படலாம், நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கலாம் என்பதால் ஒவ்வொரு வேலையிலும் பின்விளைவு பற்றி யோசித்து முடிவு எடுப்பது நல்லது. வாழ்க்கைத்துணையின் ஆலோசனை இந்த மாதத்தில் உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை ஏற்படும்.
சந்திராஷ்டமம்: நவ. 27
அதிர்ஷ்ட நாள்: நவ. 20, 21, 29, 30. டிச. 2, 3, 11, 12
பரிகாரம் வேதகிரீஸ்வரரை வழிபட நினைத்தது நடந்தேறும்.
பூசம்
எடுத்த வேலையில் உறுதியாக இருந்து வெற்றி பெறும் உங்களுக்கு, கார்த்திகை மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். உங்கள் ராசிக்கு தன குடும்பாதிபதியான சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். எடுத்த வேலையை முடித்திடக் கூடிய அளவிற்கு சூழல் சாதகமாகும். சட்ட ரீதியான பிரச்னைகள், அரசு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும். டிச.6 வரை புதன் உங்கள் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவார். எந்த வேலையை எப்படி முடிக்க வேண்டும் என்பதை அறிந்து ஒவ்வொரு வேலையையும் நடத்தி முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம்வரும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வியாபாரிகள், கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். தொழிலை விரிவு செய்வதற்காகவும் வீடு கட்டுவதற்காகவும் வங்கியில் கேட்டிருந்த பணம் கிடைக்கும். கடந்த கால நெருக்கடி விலகும் என்றாலும், நட்சத்திராதிபதி சனி அஷ்டம ஸ்தானத்தில் ராகுவுடன் சேர்ந்து சஞ்சரிப்பதால் எதிரிகளால் மறைமுக தொல்லை ஏற்படும். உங்களுக்கு எதிராக அவதுாறு பரப்புவர் என்பதால் அனைவரிடமும் அளவாக பழகுவது நல்லது. உழைப்பின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளிடம் விட்டுக் கொடுத்து நடந்தால் அவர்களை நல்ல வழிக்கு கொண்டுவர முடியும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். விவசாயம் செழிப்படையும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்: நவ. 28
அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 20, 26, 29
பரிகாரம் பைரவரை வழிபட சங்கடம் விலகும். வேண்டுதல் நிறைவேறும்.
ஆயில்யம்
புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, கார்த்திகை மாதம் நன்மையான மாதமாகும். வித்யாகாரகன் புதன் டிச.6 வரை சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும். நினைத்ததை நடத்திக் கொள்ளும் அளவிற்கு சூழ்நிலை சாதகமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்கள் செல்வாக்கு உயரும். பலமுறை முயற்சி செய்தும் நடைபெறாமல் இருந்த வேலை இப்போது நடந்தேறும். கேட்டிருந்த இடத்தில் இருந்து பணம் வரும். வரவு, செலவு சுமூகமாகும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். சிலர் புதிய இடம், வீடு என்று வாங்குவீர்கள். டிச. 6 முதல் தைரியக்காரகன் செவ்வாய் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உங்களின் வலிமை அதிகரிக்கும். எடுத்த வேலைகளை முடித்திடக் கூடிய நிலை உண்டாகும். எதிர்ப்பு, போட்டி, பிரச்னை என்ற நிலை மாறும். குடும்பத்திற்குள் இருந்த குழப்பம் விலகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மாதம் முழுவதும் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவுகளிடம் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பூர்வீகச் சொத்து விவகாரத்தில் சாதகமான நிலை ஏற்படும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், ராகுவும் உங்களுக்கு பயத்தை ஏற்படுத்தினாலும் டிச.6 வரை சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன் உங்களை சந்தோஷமாகவும், ஆரோக்யமாகவும் வைத்திருப்பார். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பார். டிச.6 முதல் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் உடல்பாதிப்பு விலகும். எதிர்ப்பு நீங்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும். விவசாயம் செழிப்படையும். முயற்சி வெற்றியாகும்.
சந்திராஷ்டமம்: நவ.29
அதிர்ஷ்ட நாள்: நவ.20, 23. டிச. 2, 5, 11, 14
பரிகாரம் வெங்கடேசரை வழிபட நினைத்தது நடந்தேறும். நன்மை அதிகரிக்கும்.