உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிம்மம் : கார்த்திகை ராசி பலன்

சிம்மம் : கார்த்திகை ராசி பலன்

மகம்

நினைத்ததை சாதிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, கார்த்திகை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். எடுக்கும் வேலைகளில் இழுபறி உண்டாகும். உங்கள் விருப்பத்திற்கு மாறாக உடன் இருப்பவர்கள் செயல்படுவார்கள். குடும்பத்திலும் எதிர்பாராத நெருக்கடி வந்து போகும். உலகையும் உறவினர்களையும் புரிந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், ராகுவும் புதிய நட்புகளால் பிரச்னைகளை ஏற்படுத்துவர். சட்டத்திற்குப் புறம்பான வேலைகளிலும் உங்களையும் அறியாமல் ஈடுபடக்கூடிய நிலை ஏற்படும். அதன் காரணமாக வழக்கு, நெருக்கடி ஏற்படும். கணவன், மனைவிக்கு இடையே விரிசல், குடும்பத்தில் ஒருவர் விட்டு ஒருவருக்கு நோய் ஏற்படும் என்றாலும், உங்கள் ஜீவனாதிபதி சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும். அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மாதத்தின் பிற்பகுதியில் திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வராமல் இருந்த பணம் வரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.

சந்திராஷ்டமம்: நவ. 29, 30

அதிர்ஷ்ட நாள்: நவ. 19, 25, 28. டிச. 1, 7, 10

பரிகாரம் கோணியம்மனை வழிபட குறை தீரும். நன்மைகள் நடக்கும்.


பூரம்

முயற்சியை மேற்கொண்டு முன்னேறுவதில் ஆர்வம் கொண்ட உங்களுக்கு, கார்த்திகை மாதம் நன்மையான மாதமாகும். நவ.27 வரை சுக்கிரன் நெருக்கடிகளில் இருந்து உங்களை மீட்டெடுப்பார். எதிர்பார்த்த பணம் வரும். ஆடை, ஆபரணம், நவீன பொருட்கள் சேரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். டிச.6 வரை சுகம், பாக்ய ஸ்தானங்களின் அதிபதியான செவ்வாய் சுக ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். தாய் தந்தையரின் ஆதரவு கிடைக்கும். எடுக்கும் முயற்சி வெற்றி பெறும்.  அதே நேரத்தில் உழைப்பு அதிகரிக்கும். வேலை, அலைச்சல் காரணமாக உடலில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். மருத்துவச் செலவு ஏற்படும். விவசாயிகளுக்கு வேலைப்பளு உண்டாகும். சுயதொழில் செய்பவர்கள்   விழிப்புடன் செயல்படுவது அவசியம். வியாபாரிகள் புதிய முதலீடு செய்வதற்கு முன்பு  நன்கு யோசிக்க வேண்டும். முதலீட்டிற்கேற்ற ஆதாயம் இல்லாத விஷயங்களில் ஆர்வம் காட்ட வேண்டாம். சப்தம சனி ராகு சஞ்சாரத்தால் கூட்டுத் தொழிலில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். பணியில் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு நிலைமை மாறும்.  சிலருக்கு வயிறு சம்பந்தமான பிரச்னைகள் தோன்றும். பெண்களுக்கு கர்ப்பப்பையில் கோளாறு ஏற்பட வாய்ப்பு உண்டு. மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.  புதியவர்களிடம் விலகி இருப்பதால் சங்கடம் ஏற்படாமல் போகும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் அக்கறை கூடும்.

சந்திராஷ்டமம்: நவ.30, டிச.1

அதிர்ஷ்ட நாள்: நவ.19, 24, 28, டிச. 6, 10, 15.

பரிகாரம் செல்வ விநாயகரை வழிபட சங்கடம் தீரும். பணப்புழக்கம் ஏற்படும்.


உத்திரம் 1ம் பாதம்

வாழ்வில் எப்போதும் தனித்துவமாக செயல்படும் உங்களுக்கு, கார்த்திகை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ராசிநாதன் சூரியன் சுக ஸ்தானமான நான்காம் இடத்தில் சஞ்சரிப்பதால் பணியாளர்களுக்கு வேலைப்பளுவும், நெருக்கடியும் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்ப்பு இழுபறியாகும். நேற்றுவரை நன்றாகச் சென்று கொண்டிருந்த வேலைகளிலும் பின்னடைவு ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். பணியாளர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற ஆதாயம் இல்லை என்ற நிலை ஏற்படும். இந்த நேரத்தில் ஜென்ம ராசிக்குள் கேது, சப்தம ஸ்தானத்தில் சனி ராகு, சுக ஸ்தானத்தில் செவ்வாய் என்ற சஞ்சார நிலை ஒவ்வொன்றிலும் போராடி வெற்றி பெற வேண்டிய நிலையை உண்டாக்கும். புடம் போட்ட தங்கமாக உங்களை மாற்றும். நண்பர் யார்? எதிரி யார் என்பதைப் புரிந்து கொள்ளும் நிலை உண்டாகும். குடும்பத்திற்குள் வீண் பிரச்னைகள் தலைதுாக்கும். டிச.6 முதல் உங்கள் ராசிக்கு தன குடும்பாதிபதியான புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எல்லாவற்றையும் புத்திசாலித்தனத்துடன் சமாளிப்பீர்கள். எதைச் செய்வது எதைத் தவிர்ப்பது என்ற புத்தி ஏற்படும். வீண் விவகாரங்களில் இருந்து வெளியில் வருவீர்கள். வங்கியில் கேட்டிருந்த பணம் கைக்கு வரும்.  சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயிகள், வியாபாரிகள் மாதம் முழுதும் கவனமுடன் செயல்படுவது நல்லது. 

சந்திராஷ்டமம்: டிச.1

அதிர்ஷ்ட நாள்: நவ.19, 28. டிச. 10

பரிகாரம் சிவபெருமானை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !