விருச்சிகம் : கார்த்திகை ராசி பலன்
விசாகம் 4 ம் பாதம்
நினைப்பதை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு கார்த்திகை மாதம் நன்மையான மாதமாகும். உங்கள் ராசிக்கு சுகாதிபதிபதியான சனி சுகஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் நிலையில் யோகக்காரகன் ராகுவும் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். கும்ப சனி உங்கள் குறைகளைத் தீர்ப்பார். வருமானத்தை அதிகரிப்பார். தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். புதிய முயற்சிகளில் ஈடுபட வைத்து வெற்றி காண வைப்பார். வீடு, வாகனம் என்ற கனவுகளை நனவாக்குவார். இந்த நேரத்தில் உங்கள் ஜீவனாதிபதி சூரியனும் ராசிக்குள் சஞ்சரிப்பதால் வருமானம் உயரும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வாடகை இடத்தில் தொழில் செய்து வந்தவர்கள் சொந்த இடத்திற்கு தொழிலை மாற்றுவர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும். சப்தமாதிபதி சுக்கிரன் நவ. 27 வரை உங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்வார். கஷ்டம் நஷ்டம் என்ற நிலைகளில் இருந்து உங்களை விடுவிப்பார். கையில் பணப்புழக்கத்தை உண்டாக்குவார். குடும்பத்தில் நிம்மதியான நிலையை ஏற்படுத்துவார். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னைகளைத் தீர்த்து வைப்பார். நவ. 27 முதல் எதிர்பார்த்த பணம் வரும். நீண்டநாள் கனவு நனவாகும். மாணவர்கள் டிச. 6 வரை படிப்பில் கவனமாக இருப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: டிச. 6
அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 21, 27, 30. டிச. 3, 9, 12
பரிகாரம் வீரபத்திரரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
அனுஷம்
நிதானமாக செயல்பட்டு எடுத்த வேலையில் வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, கார்த்திகை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். கர்மக்காரகன் சனி நவ.17 முதல் வக்கிர நிவர்த்தி அடைந்து சுக ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் இதுவரை ஏற்பட்ட குழப்பம் விலகும். பொருளாதார நிலை உயரும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். பொன் பொருள் சேரும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். நஷ்டத்தில் இயங்கி வந்த தொழில் முன்னேற்றம் அடையும். உங்கள் ராசிநாதன் டிச. 6 வரை ராசிக்குள் ஆட்சியாக சஞ்சரிப்பதால் தொழிலில் தோன்றிய எதிர்ப்பு விலகும். உடலில் ஏற்பட்ட நோய் நீங்கும். வம்பு வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். டிச.6 வரை உங்கள் லாபாதிபதி புதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய முயற்சிகளில் கவனமாக இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விவகாரத்திலும் எச்சரிக்கை தேவை. வியாபாரம் சம்பந்தப்பட்ட ஒப்பந்தம், கடன் பத்திரங்களில் கையெழுத்திடும் முன் நன்றாகப் படிப்பது அவசியம். விவசாயம், மருத்துவம், ரியல் எஸ்டேட், கெமிக்கல், சமையல் எண்ணெய், ஓட்டல் தொழில்கள் சிறப்படையும். மாணவர்களுக்கு மாத பிற்பகுதியில் படிப்பில் அக்கறை ஏற்படும். சிலருக்கு உழைப்பின் காரணமாக உடல்நிலையில் சங்கடங்கள் வந்து போகும்.
சந்திராஷ்டமம்: டிச. 6, 7
அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 18, 26, 27. டிச. 8, 9
பரிகாரம் கிருஷ்ணரை வழிபட சங்கடம் விலகும். நன்மை அதிகரிக்கும்.
கேட்டை
விவேகமாக செயல்பட்டு வேண்டியதை அடையும் உங்களுக்கு, கார்த்திகை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். உங்கள் ராசிக்கு லாபாதிபதியான புதன் டிச.6 வரை விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பல வகையில் செலவு அதிகரிக்கும். உங்களை உயர்த்திக் கொள்வதற்காகவும், செல்வாக்கை வெளிக்காட்டுவதற்காகவும் தாராளமாக செலவு செய்வீர்கள். சிலர் புதிய இடம் வீடு வாங்குவர். வியாபாரம், தொழில் செய்பவர்கள் அதிகபட்சமாக முதலீடு செய்து அதற்கேற்ற லாபம் இல்லை என வருந்துவர். பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு வசூலில் தடை ஏற்படும். சிலர் கடனுக்கு ஆடம்பரப் பொருள் வாங்கி தவணை கட்ட முடியாமல் திணறுவர். ராசிநாதன் டிச.6 வரை ஆட்சியாக சஞ்சரிப்பதும், உங்கள் ஜீவனாதிபதி சூரியன் மாதம் முழுதும் ராசிக்குள் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் அக்கறை ஏற்படும். அரசுவழி முயற்சிகளை சாதகமாக்கும். புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்தில் திறமைக்கேற்ற உயர்வு ஏற்படும். சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு, சனியால் உழைப்பால் ஆரோக்கிய குறையை ஏற்படுத்துவர். உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு இந்த மாதம் யோகமான மாதம். தலைமையிடம் நல்ல பெயர் கிடைக்கும். எதிர்பார்த்த பொறுப்பு, பதவி சிலருக்கு கிடைக்கும். கையில் எடுத்த வேலையை செய்து முடிக்கும் நிலை உண்டாகும். தம்பதிக்குள் ஒற்றுமை ஏற்படும்.
சந்திராஷ்டமம்: டிச. 7, 8
அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 23, 27. டிச. 5, 9, 14
பரிகாரம் நரசிம்மரை வழிபட நினைத்த வேலை நிறைவேறும்.