திருவண்ணாமலை தீப திருவிழா; வண்ண மின்விளக்கு, மலர்களால் அலங்காரத்தில் கோவில் வளாகம்
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, கோவில் வளாகம் வாழை மரம், வண்ண மலர் அலங்காரம் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டு கோவில் வளாகம் ஜொலிக்கிறது. பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று நடக்க உள்ள மஹா தீப திருவிழாவை முன்னிட்டு, 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள கோவில் வளாகம் மற்றும் ஒன்பது கோபுரங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இவை, 20 கி.மீ., தொலைவு வரை தெரியுமளவிற்கு ஜொலிக்கின்றன. கோவில் கொடிமர வளாகம் மற்றும் 2ம் பிரகாரம், கிளி கோபுர நுழைவாயில் ஆகியவை வாழை மரங்கள், இளநீர் குலைகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மேலும், 3 டன் அளவிற்கு பல்வேறு வண்ண ரோஜா மலர்கள், சாமந்தி பூக்களால் தோரணம் என, 2ம் பிரகாரம் அலங்கரிக்கப்பட்டு கண்கொள்ளா காட்சியாக உள்ளது.