விவசாயம் செழித்து, நாடு நலம் பெற வேண்டி ஆஞ்சநேயர் கோவிலில் கடலைக்காய் திருவிழா
ஓசூர்; ஓசூரில், விவசாயம் செழித்து, நாடு நலம் பெற, ‘கடலைக்காய் திருவிழா’ நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், சூளகிரி சுற்றுப்புற பகுதிகளில், ராகி, நிலக்கடலை போன்ற பல வகை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விவசாயம் செழித்து, விவசாயிகள் வாழ்வு மேம்பட, நாடு நலம் பெற, ஓசூர் ராஜகணபதி நகரிலுள்ள வரசித்தி ஆஞ்சநேயர் கோவிலில், ஆண்டுதோறும் ஜன., 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு தினத்தில், கடலைக்காய் (நிலக்கடலை) திருவிழா நடப்பது வழக்கம். தமிழகத்திலேயே இக்கோவிலில் மட்டும், ‘கடலைக்காய் திருவிழா’ நடத்தப்படுகிறது. 68ம் ஆண்டு, ‘கடலைக்காய் திருவிழா’ இன்று அதிகாலை, 4:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்ப அலங்காரம் நடந்தது. காலை, 10:30 மணிக்கு மேல், உற்சவமூர்த்தி முன் குவித்து வைத்திருந்த கடலைக்காய்க்கு, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் ஒன்று சேர்ந்து, கடலைக்காய்களை கோவில் கோபுரம் மீது வீசி, ஆஞ்சநேயரை வழிபட்டனர். கோபுரத்தில் மீது வீசிய கடலைக்காயில் கீழே விழுந்தவற்றை, பக்தர்கள் வீடுகளுக்கு பிரசாதமாக எடுத்து சென்றனர். ஏற்பாடுகளை, ஓசூர் மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவரும், கோவில் நிர்வாகியுமான மாதேஸ்வரன், கவுன்சிலர் தில்ஷாத் முஜிபூர் ரஹ்மான், நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, ரவிசங்கர், சுரேஷ், ஜெய்சங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.