சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்: நாளை அதிகாலை ஆருத்ரா தரிசனம்
சிதம்பரம்: பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து வா, வா நடராஜா, வந்து விடு நடராஜா என கோஷமிட்டு தேர்களை இழுத்தனர். நாளை சனிக்கிழமை அதிகாலை மகாபிஷேகமும், பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.
வீதிவலம் வந்த 5 தேர்கள்: நடராஜர் கோயிலில் கடந்த டிச.25ம் தேதி கொடியேற்றத்துடன் ஆருத்ரா தரிசன உற்சவம் தொடங்கியது. 9-ம் நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்த்திருவிழாவை முன்னிட்டு சித்சபையில் உள்ள மூலவர்களான நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் உற்சவர்கள் சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனி தனி தேர்களில் அதிகாலை எழுந்தருளினர். பின்னர் கீழவீதி தேரடி நிலையிலிருந்து 8 மணிக்கு தேர்கள் புறப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். தேர்கள் தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக மாலை கீழவீதி தேர்நிலையை அடைந்தன.
உழவாரப்பணி மற்றும் திருமுறை இன்னிசை
தேர்களுக்கு முன்பு வீதிகளில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர், தில்லைத் திருமுறைக்கழகம், அப்பர் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் திரளான பெண்கள் வீதிகளை நீரினால் கழுவி கோலமிட்டு உழவாரப்பணியை மேற்கொண்டனர். தேர்களுக்கு முன்பாக ஓய்வுபெற்ற ஆசிரியர் எம்.பொன்னம்பலம் தலைமையில் சந்திர பாலசுப்பிரமணியன் முன்னிலையில் ஓதுவார்கள் திருமுறை இன்னிசை ஆராதனை நிகழ்த்தி சென்றனர். மேலும் தேரோடும் வீதிகளில் இளைஞர்களின் சிலம்பாட்டம், மாணவியர்களின் கோலாட்டம், சிவபக்தர்கள் சிவன் பார்வதி வேடமணிந்து நடணம், மேள கச்சேரி ஆகிய நிகழ்ச்சிகள் நடத்திய வன்னம் சென்றனர்.
மீனவ சமுதாயத்தினரின் மண்டகப்படி
மீனவ சமுதாயத்தில் பிறந்த பார்வதிதேவியை, சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார் என்பதால் தாய் வீட்டு சீதனமாக ஒவ்வொரு தேர் திருவிழாவின் போதும் மீனவர் சமுதாயத்தினர் சார்பில் தேரோட்டத்தின் போது சீர் அளிப்பது வழக்கமாக உள்ளது. இதனை முன்னிட்டு முன்னதாக மாலை 3மணிக்கு மேலவீதி கஞ்சித்தொட்டி அருகே மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களால் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சியான நடராஜருக்கு, அம்பாளுக்கும் சீர்அளித்து, பட்டு சாத்தி சிறப்பு தீபாராதனை செய்து மரியாதை செலுத்தும் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்ற பின்னர் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. பின்னர் இரவு ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் தேரில் இருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபம் சென்றனர். அங்கு இருவருக்கும் ஏககால லட்சார்ச்சனை நடைபெறறது. முன்னதாக மேலவீதி நகராட்சி வளாகம் முன்பு நகராட்சி சார்பில் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் த.மல்லிகா, பொறியாளர் சுரேஷ், பேராசிரியர் ராமநாதன், நகரமன்ற உறுப்பினர்கள் த.ஜேம்ஸ் விஜயராகவன், அப்புசந்திரசேகரன், ஏஆர்சி.மணிகண்டன், திமுக நகர துணை செயலாளர்கள் பா.பாலசுப்பிரமணியன், ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பு அர்ச்சனை, தீபாராதனை செய்தனர்.
நாளை மகாபிஷேகம், ஆருத்ரா தரிசனம்: நாளை ஜன.3ம் தேதி சனிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் ஆயிரங்கால் மண்டப முகப்பில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும், புஷ்பாஞ்சலியும். ஸ்வர்ணாபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது. பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெறுகிறது. அதனையடுத்து பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடனமாடி ஆருத்ரா தரிசன காட்சியளித்து, சித்சபா பிரவேசம் செய்கின்றனர். ஜன.4-ம் தேதி முத்துப்பல்லக்கு வீதிஉலா காட்சியும், ஜன.5-ம் தேதி ஞானப்பிரகாசர் குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை உற்சவ ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்களின் செயலாளர் த.சிவசுந்தர தீட்சிதர், துணைச்செயலாளர் சிஎஸ்எஸ்.வெங்கடேச தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் கே.சிவாநாத் தீட்சிதர் ஆகியோர் செய்திருந்தனர். விழுப்புரம் சரக டிஐஜி, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் நேரடி மேற்பார்வையில் சிதம்பரம் டிஎஸ்பி டி.பிரதீப் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் எஸ்.சிவானந்தன், கே.அம்பேத்கர் மற்றும் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை நகராட்சி ஆணையர் த.மல்லிகா, பொறியாளர் சுரேஷ் ஆகியோர் செய்தனர். போலீஸாருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினர், பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த என்எஸ்எஸ், என்சிசி மாணவர்கள் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.