வேதாஸ்ரம குருகுலத்தில் சங்கர பாரதி சுவாமிகளுக்கு வரவேற்பு
புதுச்சேரி: கருவடிக்குப்பம் கோமாதா ஆலயத்தில் உள்ள வேதாஸ்ரம குருகுலத்திற்கு, வருகை தந்த அபிநவ சங்கர பாரதி மஹாசுவாமிகள் வேதம் படிக்கும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
கர்நாடகா மாநிலம் கூடலி சிருங்கேரி தக்ஷிணாம்நாய சாரதா பீடம் அபிநவ சங்கர பாரதி சுவாமிகள் 6 நாள் ஆன்மீக பயணமாக புதுச்சேரிக்கு கடந்த 1ம் தேதி வருகை புரிந்து அருளாசி வழங்கி வருகிறார். நேற்று 5ம் தேதி புதுச்சேரியின் பிரபலமான வேதபாட சாலை, வேதாஸ்ரம குருகுலத்திற்கு வருகை புரிந்தார். தொடர்ந்து, அபிநவ சங்கர பாரதி சுவாமிகள் வேதம் படிக்கும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து, அபிநவ சங்கர பாரதி சுவாமிகளுக்கு பாதபூஜை, வேதாபாராயணம் மற்றும் பஜனை நடந்தது. அதனையடுத்து சுவாமிகள் பாடசாலையில் உள்ள பசுக்களுக்கு உணவளித்தார். இதற்கு முன் நடந்த நிகழ்ச்சியில் சுவாமிகள், சமூக சேவை மற்றும் வேதத்திற்காக தன்னை வாழ்நாள் முழுவதும் அர்பணித்த ராஜா சாஸ்திரிகளுக்கு வைதீக ரத்னா பட்டத்தை வழங்கினார். மேலும் இந்து தர்மம் வளர்ந்து செழிக்க உபதேசங்கள் வழங்கினார். தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள அனைத்து மக்களும் நலமுடன் வாழ ஆசி வழங்கினார்.