ஐயப்பன் கோவில் மகர விளக்கு திருவிழா: கோலாட்டத்தில் அசத்திய ஆண்கள்
பந்தலூர்; பந்தலூர் அருகே பெக்கி ஸ்ரீ ஐயப்பன் கோவில் மகர விளக்கு திருவிழாவில், ஆண்கள் பங்கேற்ற கோலாட்டம் அனைவரையும் கவர்ந்தது.
பெக்கி ஸ்ரீ ஐயப்பன் கோவில் மகர விளக்கு திருவிழா 13 ஆம் தேதி மாலை 4- மணிக்கு நடைதிறப்புடன் துவங்கியது. தொடர்ந்து தாந்த்ரீக பூஜைகள், செண்டை மேளம், ஹோமம், இரவு பூஜை மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 4-மணிக்கு நடைதிறப்பு, விஸ்வரூப தரிசனம், திருமஞ்சனம், மலர் நிவேதியம், கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து கோவில் தந்தி ஸ்ரீ நாராயண நம்பூதிரிபாடு தலைமையில் கொடியேற்றுதலும், பஞ்சகவ்ய கலசாபிஷேக பூஜை, செண்டை மேள கச்சேரி நடந்தது. தொடர்ந்து மதிய பூஜை, நாக கலச பூஜை, குளியல் கலச பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. இதில் ஆண்கள் பங்கேற்ற கோலாட்டம், பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து பெண்கள் பங்கேற்ற கைகொட்டிக்களி, அன்னதானம், தீபம் கொளுத்துதல், சுவாமி பவானி, இரவு பூஜை, அப்ப நிவேதியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகி ஸ்ரீதரன் தலைமையிலான குழுவினர் மற்றும் பொதுமக்களும், பூஜைகளை மேல் சாந்தி கவிந்தன் தலைமையிலான குழுவினரும் செய்திருந்தனர்.