திருவண்ணாமலையில் நந்தி பகவான், சூரிய பகவானுக்கு அருணாசலேஸ்வரர் காட்சி
திருவண்ணாமலை; உழவர் திருநாளை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நந்தி பகவான் மற்றும் சூரிய பகவானுக்கு, அருணாசலேஸ்வரர் மற்றும் பராசக்தி அம்மன் காட்சி அளித்தனர்.
மாட்டு பொங்கல் இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆயிரங்கால் மண்டபத்தின் அருகே உள்ள, 12 அடி உயர பெரிய நந்தி பகவான், கோவில் கொடி மரம் அருகில் உள்ள அதிகார நந்தி, கிளி கோபுரம் எதிரில் உள்ள நந்திக்கு, சிறப்பு அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர், பெரிய நந்தி பகவானுக்கு, வண்ண மலர்கள், ஆப்பிள், வாழைப்பழம், போன்ற பல்வேறு வகையான பழங்கள், லட்டு, அதிரசம், முருக்கு, சீடை, பிஸ்கட், உள்ளிட்ட பல்வேறு திண்பண்டங்கள், கத்திரிக்காய், முருங்கை, அவரை, வாழைக்காய், உள்ளிட்ட பல்வேறு காய்கள், மற்றும் ரூபாய் நோட்டுக்கள் என, 108 வகையான, மாலைகளால் அலங்கரித்து, சிறப்பு பூஜை நடந்தது. அப்போது, காலை, 6:00 மணிக்கு, உண்ணாமுலைம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், நந்திபகவானுக்கு காட்சி அளித்தனர். பின்னர், ராஜகோபுரம் அருகில் உள்ள திட்டி வாயலில், சூரியபகவானுக்கு உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மனும் ஒன்றாக எழுந்தருளி காட்சி அளித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.