விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றுத் திருவிழாவில் மஞ்சள் பை விழிப்புணர்வு
விழுப்புரம்: விழுப்புரம் தென்பெண்ணை ஆற்று திருவிழாவில் மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் மஞ்சள் பை வழங்கும் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
விழுப்புரம் அடுத்த பேரங்கியூர் தென்பெண்ணைஆற்றுத் திருவிழாவில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை சார்பில், பிளாஸ்டிக் மாசில்லாத தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர்கள் செல்வகுமார், ராஜேந்திரன், உதவி பொறியாளர்கள் இளையராஜா, சங்கவி, திருவெண்ணெய்நல்லுார் பி.டி.ஓ.,க்கள் முல்லை, பாலசுப்ரமணியன் ஆகியோர் பொது மக்களுக்கு மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விழாவில் சுற்றுசூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பை, உரைகள், தட்டுகள், குவளைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான நெகிழித்தாள் உரைகளை பயன்படுத்தாமல், காகித பை, துணிப்பைகள் பயன்படுத்த வேண்டும். மண் பாண்டங்கள், சணல் பை, வாழை இலை, தாமரை இலை உள்ளிட்ட இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். அதனுடன் மஞ்சள் பையினை பயன்படுத்த வேண்டும் என கூறி, மஞ்சள் பைகளை வழங்கினர்.