பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்கள் உத்சவம் கோலாகலம்
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் நேற்று கோலாகலமாக நடந்தது.
உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகரில் பட்டுவதனாம்பிகை சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நடப்பாண்டிற்கான தைப்பூசம் விழா, கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் உற்சவர் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தைப்பூச திருவிழாவின் ஏழாம் நாளில் திருத்தேர் உத்சவம் வெகு சிறப்பாக நடந்தது.
இந்நிலையில், ஒன்பதாம் நாளான நேற்று காலை 10:00 மணிக்கு, 63 நாயன்மார்கள் உத்சவம் நடந்தது. அதில், பட்டுவதனாம்பிகை, பி ரம்ம புரீஸ்வரர், விநாயகர், சுப்பிரமணியர் ஆகியோர் முன் செல்ல, 63 நாயன்மார்கள் சிறப்பு அலங்காரத்தில் பின் தொடர்ந்து சென்றனர். நாளை இரவு, பிரம்மபுரீஸ்வரர் பட்டுவதனாம்பிகை தாயாருடன், 25 கிராம சுவாமிகள் செய்யாற்றில் எழுந்தருளும் விழா நடக்கிறது.