உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் அபசகுனம்; முதல்வர் மனைவி துர்கா டென்ஷன்

ஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் அபசகுனம்; முதல்வர் மனைவி துர்கா டென்ஷன்

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் யாகசாலை பூஜையின்போது, கலசங்களை பரிசாரகர்கள் தள்ளிவிட்ட தகவல் அறிந்து, முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா கோபமடைந்தார்.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் பூஜைகள் மற்றும் திருவிழாக்களின்போது, கைங்கர்யம் செய்வதில் கோவில் முறை பட்டர்களுக்கும், பரிசாரகர்களுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. கடந்த 2025ம் ஆண்டு ஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கொடியேற்றத்தின்போது, கொடி மரத்தில் சந்தனம் வைப்பதில், பக்தர்கள் முன்னிலையில், இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், ஆண்டாள் திருக்கல்யாண கொடியேற்ற நாளில் இருந்து, தினமும் காலை, மாலை கண்ணாடி மாளிகை அருகே கலசம்வைத்து யாகசாலை பூஜைகள் நடந்து வந்தன. பத்தாம் நாளான நேற்று காலை 9:30 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடந்தபோது, பரிசாரகர்கள் தரப்பினர் வாக்குவாதம் செய்து, யாகசாலையில் இருந்த கலசங்களை கீழே தள்ளி விட்டனர். கலசங்களில் இருந்த புனித நீர், தரையில் சிந்தி ஓடியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


இது குறித்து, கோவில் நிர்வாக வட்டாரங்கள் கூறியதாவது: கோவிலில் ரமேஷ் என்பவரின் தலைமையில் ஒரு அணி செயல்படுகிறது. அந்த டீம் தான், ஆண்டாள் கோவிலில் கலசங்களை சாய்த்து, பிரச்னையில் ஈடுபட்டிருக்கிறது. ஏற்கனவே, இரு தரப்புக்கும் இடையே பிரச்னை தொடருவதால், தற்போதைய விழா காலத்தில் பிரச்னைகள் வந்து விடக்கூடாது என, அதிகாரிகள் முன்பே எச்சரித்திருந்தனர். ஆனாலும், இந்த டீம், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு நெருக்கம் என்பதால், தொடர்ச்சியாக இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.


ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலின் கோபுரம் தான், தமிழக அரசின் சின்னமாக உள்ளது. இதனால், அரசு நிலையாக இருக்க, முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா, ஆண்டாள் கோவில் வழிபாட்டுக்கு அதீத முக்கியத்துவம் கொடுப்பார். தற்போது, யாகசாலையில் இருந்த கலசங்களின் புனிதநீர், தேர்தல் சமயத்தில் கீழே கொட்டியதை அபசகுனமாக துர்கா பார்க்கிறார். இந்த தகவல் தெரிந்ததும் டென்ஷனாகி விட்டார். அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு, தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. அதேபோல், இதற்கு பரிகாரங்கள் செய்யவும் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்; ஆண்டாள் கோவிலுக்கு நேரில் வந்து, பரிகாரங்களை செய்யவும் துர்கா தயாராகி வருகிறார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின. கலசங்கள் கீழே சாய்க்கப்பட்ட விவகாரம் குறித்து, கோவில் செயல் அலுவலர் சக்கரையம்மாள் விசாரித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், பிரச்னை குறித்து அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி, பிரச்னைகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !