செம்மேடு காசி விஸ்வநாதர், வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
பண்ருட்டி: காசிவிஸ்வநாதர், வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பண்ருட்டி அடுத்த செம்மேடு கிராமத்தில், 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் மற்றும் வரதராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஒரே வளாகத்தில் சிவபெருமான், வரதராஜபெருமாள் கோவில் இருப்பது சிறப்பு வாய்ந்ததாகும். இக்கோவிலில் தரிசனம் செய்தால் காசியில் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோவில்கள்திருப்பணிகள் முடிந்து கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.
காசி விஸ்வநாதசுவாமி கோவிலில் கடந்த 9ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிேஷக பூஜைகள் துவங்கியது. 10ம் தேதி முதல்கால யாகசாலை பூஜை, 11ம் தேதி காலை 2ம் கால பூஜை, மாலை 6:00 மணிக்கு 3 ம்கால பூஜை , நேற்று காலை 6:00 மணிக்கு 4ம் கால பூஜையும் நடந்தது. வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த 10ம் தேதி பூஜைகள் துவங்கி நடந்து வந்தது.
நேற்று காலை 4ம் கால யாக வேள்வி பூர்ணாகுதி முடிந்து, காலை 8:45 மணிக்கு காசிவிஸ்வநாதர், அம்பாள், ராஜகோபுரம், வரதராஜபெருமாள் கோபுரத்திற்கான கடம்புறப்பாடாகி 9:15 மணிக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலாய சுவாமிகள் தலைமையில் கும்பாபிேஷகம் நடந்தது.
சென்னை ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன், அறநிலைய கூடுதல் கமிஷ்னர் ரவிச்சந்திரன், திருப்பணி கூடுதல் கமிஷனர்கள் ஜெயராமன், மங்கையர்கரசி, கடலுார் இணை கமிஷ்னர் ஜோதி, உதவி கமிஷனர் சிவக்குமார், பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவில் நிர்வாக டிரஸ்டி கோதண்டராமர், செயலாளர் நரசிம்மன், டிரஸ்டிகள் நடராஜன், பழனியப்பன், செல்வம், அறநிலைய ஆய்வாளர் வசந்தம், செயல் அலுவலர் சரவணரூபன், முன்னாள் செயல் அலுவலர் நாகராஜன், வக்கீல் பார்த்தசாரதி, முன்னாள் துணை சேர்மன் விஜயரங்கன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஊர் விழா குழுவினர் செய்திருந்தனர்.