படகு திருவிழா நடக்கும் வெங்கடரமணா கோவில்
உத்தரகன்னடாவில் பல கோவில்கள் உள்ளன. இங்குள்ள கோவில்கள் மிக அழகாக காணப்படும். கட்டட கலைகளும் பிரமாதமாக இருக்கும். அப்படி உத்தர கன்னடாவின் அங்கோலாவில் உள்ள பிரசித்தி பெற்ற வெங்கடரமணா கோவில் உள்ளது. இக்கோவில், அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. வெளி மாநிலம், பிற மாவட்டங்களில் இருந்தும் ஒரு நாளைக்கு நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
இந்த கோவில் அமைந்துள்ள பகுதி, ஒரு காலத்தில் அடர்ந்த காடாக இருந்தது. இந்த வனப்பகுதிகளில் மாடுகளை மேய்த்து செல்லும் நபர், ஒரு பெரிய கல் கிடப்பதை கண்டுபிடித்தார். அந்த கல்லில் பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் வெங்கடரமணாவின் உருவம் இருந்தது. அந்த கல் இருந்த இடத்திலேயே கோவில் கட்டப்பட்டு, தற்போது வழிபடப்படுகிறது என பக்தர்கள் கூறுகின்றனர்.
இக்கோவில் எந்த ஆண்டில் கட்டப்பட்டது என்பது குறித்த சரியான ஆதாரம் இல்லை. இருப்பினும், கோவில் கல்வெட்டுகளில் மராட்டியர்கள் கோவில் கட்டுமானத்துக்கு உதவியதாக கூறப்பட்டு உள்ளது. இங்கு ஆண்டுத் திருவிழா மிகவும் பிரமாண்டமாக இருக்கும். ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பர். பல்லக்குகளில் சுவாமி ஊர்வலம் நடக்கும். தொடர்ந்து படகு திருவிழாவும் நடக்கும். இந்த திருவிழா கேரளத்தில் நடப்பது போல இருக்கும். இதை பார்ப்பதற்கே அருமையாக இருக்கும்.
கோவில் காலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை திறந்திருக்கும். இந்த கோவிலுக்கு அருகே பூங்கா, கடற்கரை உள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடலாம்.
எப்படி செல்வது?
பஸ்: முதலில் உத்தரகன்னடா பஸ் நிலையத்திற்கு வர வேண்டும். அங்கிருந்து பஸ் மூலம் கோவிலை அடையலாம்.
ரயில்: உத்தரகன்னடா ரயில் நிலையத்திற்கு வர வேண்டும். அங்கிருந்து டாக்சி மூலம் கோவிலை அடையலாம்.