அன்னூர் பெருமாள் கோவிலில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம்
அன்னூர்: அன்னூர், பெருமாள் கோவிலில், ராமானுஜர் அவதார திருநாள் விழா இன்று நடந்தது.
ராமானுஜரின் அவதாரத் திருநாள், ஒவ்வொரு ஆண்டும், சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு உற்சவம் இன்று அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்தது. காலை 6:00 மணிக்கு, விஸ்வக்சேனா ஆராதனை, புண்யா வாசனம் நடந்தது. ஓய்வு பெற்ற ஆசிரியர் செந்தில்குமார் எனக்குற்ற செல்வம் ராமானுஜர் என்னும் தலைப்பில் பேசுகையில்," ராமானுஜர் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். வேதத்துக்கு இணையான ஆழ்வார்கள் அருளிய திவ்ய பிரபந்தங்களை வாசித்து உணர வேண்டும். ஸ்ரீமத் நாராயணனே பரம்பொருள் எனத் தெளிந்து அவன் மீது பக்தி செலுத்த வேண்டும். சரீரம் வேறு, ஆத்மா வேறு என்று கூறியவர் ராமானுஜர். நாராயணனின் திருவடிகளில் சரணடைந்தவர்களுக்கு துன்பம் என்பதே இல்லை. புலனடக்கம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். இந்திரியங்களுக்கு வசப்படக்கூடாது. அற்ப விஷயங்களில் ஆசை கொள்ளக் கூடாது, என ராமானுஜர் அறிவுறுத்தி உள்ளார்," என்றார். காலை 7:45 மணிக்கு மூலவர் ராமானுஜருக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. உற்சவர் ராமானுஜர் கோவில் உட்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.