மருதமலை கோவிலில் தைப்பூசத் திருவிழாகொடியேற்றத்துடன் துவக்கம்!
பேரூர்: மருதமலை சுப்ரமணிய”வாமி கோவிலில் தைப்பூசத் தேர்த்திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.முருக பெருமானின் ஏழாம்படை வீடாக மருதமலை போற்றப்படுகிறது. கொங்குநாட்டில் கோவை அருகே மருதகிரியில் மருதாச்சலமாக முருகக்கடவுள் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடக்கிறது. விழா இன்று காலை 6.30 மணிக்கு மேல் 7.00 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, 25ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு, காலை, மாலை கோவிலைச் சுற்றி சுப்ரமணிய சுவாமி திருவீதி உலா நடக்கிறது. வரும் 26ம் தேதி மாலை, தங்கமயில் வாகனகாட்சியும், சந்தனகாப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. இதையடுத்து, வரும் 27ம் தேதி, காலை 7.30 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் தைப்பூச திருவிழா நடக்கிறது.தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு மேல் 11.00 மணிக்குள் , வெள்ளையானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா மற்றும் ரதாஹோரணமும் நடத்தப்படுகிறது. காலை 11.00 மணிக்கு மேல், சுப்ரமணிய சுவாமி, வள்ளிதெய்வானை சமேதரராய் எழுந்தருளிய, திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5.00 மணிக்கு, ஊஞ்சல் குதிரை வாகனமும், தெப்பத்திருவிழாவும் நடக்கிறது. இறுதியாக, வரும் 29ம் தேதி பகல் 12.00 மணிக்கு மஹா தரிசனம் நடத்தப்பட்டு, மாலை கொடியிறக்குதலுடன் விழா முடிகிறது. விழா, ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.