உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போரில் இறந்த வீரர்களின் மரபு போற்றும்பழமையான நடுகற்கள் கண்டெடுப்பு

போரில் இறந்த வீரர்களின் மரபு போற்றும்பழமையான நடுகற்கள் கண்டெடுப்பு

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே போரில் இறந்த வீரர்களின் பழமைவாய்ந்த நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


விக்கிரவாண்டி அருகே வி.சாத்தனூர் கிராமத்தில், வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் நேற்று முன்தினம் கள ஆய்வு செய்தார். அப்போது, அவர் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த வீரர்களின் நடுகற்களை கண்டறிந்தார். இது பற்றி ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது,  வி.சாத்தனூர் கிராமத்தில் உள்ள விளை நிலத்தில் உருவங்கள் பொறிக்கப்பட்ட நிலையில் 3 கற்கள் நடப்பட்டுள்ளது. ஓரளவுக்கு பெரிதான கல்லில் வலது பக்கம் திரும்பிய நிலையில் வீரன் ஒருவன் நின்றிருக்கிறான். அவனது இடதுகரம் வாளை கீழ்நோக்கி பிடித்த நிலையில் காணப்படுகிறது. வலது கை மேல் நோக்கி உயர்ந்துள்ளது. வாள் கீழ்நோக்கி இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது போர் அல்லது சண்டை முடிந்து விட்டதைக் குறிக்கிறது. இப்பகுதியில் நிகழ்ந்த போர் அல்லது சண்டையில் உயிர்நீத்த வீரனாக இவர் இருக்கலாம். இதற்காக நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. இது வீரக்கல் என்றும், நினைவுக்கல் என அழைக்கப்படுகிறது.


இதனருகேவுள்ள மற்றொரு சிற்பத்தில் பெண் உருவம் காணப்படுகிறது. இது அந்த வீரனோடு இறந்த அவரது மனைவியாக இருக்கலாம். அருகிலுள்ள மற்றொரு சிற்பம் கை, கால்களைத் தொங்கவிட்ட நிலையில் காணப்படுகிறது. தலை துண்டிக்கப்பட்டுள்ளது. கழுவேற்ற சிற்பம் போல் தெரிகிறது. இந்த சிற்பம் குறித்து மேலதிக ஆய்வுகள் தேவைப்படுகிறது. இதனருகே அமைந்துள்ள ஐய்யனார் கோவில் வளாகத்திலும், இதுபோன்ற இரண்டு நினைவுக் கற்கள் காணப்படுகிறது. வீரன் ஒருவன் கையில் வில்லேந்தியும், மற்றொரு வீரன் கைகளில் வாளும், கேடயம் ஏந்தியும் காணப்படுகின்றனர். கி.பி.15-16–ம் நூற்றாண்டில் இப்பகுதியில் போர் அல்லது சண்டை நிகழ்ந்துள்ளது. இதில் உயிர் நீத்த வீரர்களுக்கு நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பங்கள் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். மேலும், இந்த ஊரில் சோழர் காலத்தைச் சேர்ந்த சப்தமாதர்கள் சிற்பங்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வரலாற்றுப் பின்புலம் கொண்ட ஊராக வி.சாத்தனூர் இருந்துள்ளது என்பதற்கு இந்தச் சிற்பங்கள் சான்றாக விளங்குவதாக, செங்குட்டுவன் தெரிவித்துள்ளார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !