கோயில்களில் அறங்காவலர்கள் நியமனமின்றி ஆன்மிக பணி தொய்வு
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் உள்ள பெரும்பாலான கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்காததால் ஆன்மிக பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
திருவாடானை தாலுகாவில் பழமையும், பெருமையும் வாய்ந்த ஏராளமான கோயில்கள் அமைந்துள்ளன. இதில் பெரும்பாலான கோயில்கள் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே இங்குள்ள பெரும்பாலான கோயில்களில் அறங்காவலர் குழுக்கள் நியமிக்கப்படவில்லை. கோயில்களில் திரு விழாக்கள் நடத்துவது தினசரி பூஜைகளை முறைப்படுத்துவது, பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது மற்றும் கும்பாபிேஷகம் போன்ற திருப்பணிகள் செய்வதில் அறங்காவலர்களின் பங்கு முக்கியமானது.ஆனால் அறங்காவலர்கள் இல்லாததால் வளர்ச்சி பணிகளை முறையான முடிவுகளை எடுக்க முடிவதில்லை. இதனால் சில கோயில்களில் திருப்பணிகள் நடைபெறாமல் உள்ளது. இதனால் ஆன்மிக பணிகள் முடங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பக்தர்கள் கூறுகையில், கோயில்களில் முறையான நிர்வாகத்திற்கும் ஆன்மிக பணிகள் தொய்வின்றி நடப்பதற்கும் அறங்காவலர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். ஆகவே ஹிந்து சமய அறநிலையத்துறையினர் தகுதியானவர்களை அறங்காவலர் பணியிடங்களில் நியமிக்க வேண்டும் என்றனர். இது குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கூறுகையில், இத்தாலுகாவில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக 130 கோயில்கள் உள்ளன. அறங்காவலர்கள் இல்லாத கோயில்கள் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து கோயில்களுக்கும் அறங்காவலர்கள் நியமிக்கப் படுவார்கள் என்றனர்.