மாநிலம் முழுதும் வழிபாட்டு தலங்கள் : போலீசார் கணக்கெடுப்பு
சென்னை: மாநிலம் முழுதும், கோவில், சர்ச், மசூதி மற்றும் அரசு அதிகாரிகள், முக்கிய அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகள் எத்தனை உள்ளன என்பது குறித்து, போலீசார் கணக்கெடுப்பு நடத்துகின்றனர்.
தமிழகத்தில், 1,321 சட்டம் – ஒழுங்கு போலீஸ் நிலையங்கள் உள்ளன. இவற்றுக்கு எல்லைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லைக்குள், கோவில், சர்ச், மசூதிகள், பள்ளி, கல்லுாரிகள், அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகளின் வீடுகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வீடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள் எத்தனை உள்ளன என்பது குறித்து, போலீசார் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். அதேபோல், காவல் நிலைய எல்லைகளில், எத்தனை ரவுடிகளின் வீடுகள் உள்ளன. சந்தேக நபர்கள் மற்றும் பிரச்னை அதிகம் நடக்கும் இடங்கள், மென் பொருள் நிறுவனங்கள், ஏரி, குளம், ஆறுகள், டாஸ்மாக் கடைகள், கல்லறைகள் என, 26 தலைப்புகளில் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘ஏற்கனவே போலீஸ் நிலையங்களில் உள்ள தரவுகளை புதுப்பிக்கவும், புதிய இடங்களுக்கு போலீசாரை விரைவாக அனுப்பவும், குற்றத் தடுப்பு நடவடிக்கைக்காகவும், இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது’ என்றனர்.