சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் விநாயகர் சிலைகளுக்கு தடை விதிக்க கோரிக்கை
தஞ்சாவூர்,- தமிழகத்தில் வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் ரசாயனப் பொருட்களால் சிலைகள் தயாரிப்பதைத் தடை செய்யக் கோரி, அகில பாரத இந்து மகா சபா சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநிலப் பொதுச்செயலாளர் ராம. நிரஞ்சன், தமிழக முதல்வர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மற்றும் டிஜிபி அனுப்பிய கோரிக்கை மனுவில், விநாயகர் சதுர்த்தி நெருங்கி வரும் வேளையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறாக சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மற்றும் தெர்மாகோல், பிளாஸ்டிக் பொருட்கள். நச்சுத்தன்மை கொண்ட ரசாயன வண்ணங்கள், ஈயம், பாதரசம், காட்மியம் போன்ற ஆபத்தான கனிம உலோகக் கலவைகள். இத்தகைய பொருட்கள் ஏற்கனவே பல இடங்களுக்குக் கடத்தி வரப்பட்டு, கிடங்குகளில் இறக்கப்பட்டு வருவதாக மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளதால், அதிகாரிகள் ஆரம்ப நிலையிலேயே ஆய்வு செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தி என்பது இயற்கையைப் போற்றும் ஒரு ஆன்மீகத் திருவிழா. ஆனால், ரசாயனப் பொருட்களால் செய்யப்படும் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் போது, கடுமையான நீர் மாசுபாடு ஏற்படுகிறது. இதனால் நீர்வாழ் உயிரினங்கள் மடிவதோடு, நிலத்தடி நீரும் மாசுபட்டு இயற்கை வளங்கள் சீரழிகின்றன.
எனவே தமிழக அரசும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் ஏற்கனவே விதித்துள்ள விதிமுறைகளின்படி, களிமண் மற்றும் இயற்கை வண்ணங்களால் மட்டுமே சிலைகள் தயாரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள், மாநகராட்சிகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சிலை தயாரிப்பு மையங்கள் மற்றும் கிடங்குகளில் அதிகாரிகள் உடனடியாக நேரடி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். விதிகளுக்குப் புறம்பாக ரசாயனப் பொருட்களைச் சேமிப்பவர்கள் மற்றும் சிலை செய்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழா முடியும் வரை, மாவட்ட வாரியாகச் சிறப்புக் கண்காணிப்புக் குழுக்களை அமைத்துத் தொடர் கண்காணிப்பை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தின் நீர்நிலைகளையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கத் தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.