திருச்செந்தூர் கோவிலில் தரிசன கட்டண உயர்வு இல்லை; அமைச்சர் ரமேஷ்
திருவள்ளூர்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட் விலை உயர்த்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் ரமேஷ் மறுப்பு தெரிவித்தார்.
இது குறித்து நிருபர்களிடம் அமைச்சர் ரமேஷ் கூறியதாவது: திருச்செந்தூரில் கட்டணம் உயர்த்தவே இல்லை. அங்கே 20க்கும் மேற்பட்ட சேவைகள் இருக்கிறது. அதே கட்டணத்தில் தான் நீடிக்கிறது. நிர்வாக ரீதியாக அங்கே சில முறைகேடுகள் இருப்பது தெரியவந்தது. ஏற்கனவே கட்டணம் உயர்வு குறித்து அதிகாரிகள் பரிசீலனை செய்து வைத்து இருந்தனர். அதற்கான பொதுமக்களின் கருத்துகேட்பு நடத்தப்பட்டது.
கருத்து மட்டும் தான் கேட்கப்பட்டு இருக்கிறது. விலை எல்லாம் உயர்த்தவில்லை. நிறைய இடங்களில் விலை உயர்த்தப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. பொதுமக்கள் கருத்தில் இதை உயர்த்த வேண்டாம் என்று சொன்னால் நாங்கள் உயர்த்தமாட்டோம். பொதுமக்களின் கருத்தை தாண்டி இந்த அரசு எந்தவித முடிவையும் எடுக்காது. பொது மக்கள் என்ன சொல்கிறார்களோ அதன் படி தான் இந்த அரசு நடக்கும். இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறினார்.