மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் செப்., 17ல் கும்பாபிஷேகம்; முகூர்த்தக்கால் நடப்பட்டது
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடப்பதை முன்னிட்டு கோயிலில் முகூர்த்தக்கால் முகூர்த்தம் இன்று நடைபெற்றது.
கோயில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஐதீகம். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2009 ஏப்.,8 ம் தேதி நடந்தது. அடுத்த 12 ஆண்டுகளில் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 2018 பிப்.,2ல் கோயிலின் வீரவசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் மண்டபம் சீரமைப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கும்பாபிஷேகம் தள்ளிப்போனது. கோயில் நிதி ரூ.15.81 கோடி மற்றும் உபயதாரர் நிதி ரூ.5.16 கோடி என மொத்தம் ரூ.32.28 கோடியில் 186 திருப்பணிகள் நடந்து வருகின்றன. வீரவசந்தராயர் மண்டபத்தை பழமை மாறாமல் சீரமைக்க ரூ.35.30 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வந்தது. இம்மாதம் இறுதிக்குள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் செப்., 17ல் கும்பாபிஷேகம் நடப்பதை முன்னிட்டு கோயிலில் முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். செப்.,17ல் (ஆவணி 31-ம் தேதி) காலை 7:45 மணி முதல் 8:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.