திருப்பூர்: சனி மஹா பிரதோஷம்; சிவாலயங்கள் கோலாகலம்
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், சனி மஹா பிரதோஷத்தையொட்டி, நேற்று, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
ஆனி மாதத்தின் முதல் பிரதோஷமான நேற்று, சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சனி மஹா பிரதோஷம் என்பதால், அனைத்து சிவாலயங்களிலும் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வழிபட்டனர்.
திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், மாலை, 4:00 மணிக்கு மூலவர் மற்றும் அதிகாரநந்திக்கு மஹா அபிஷேகம் நடந்தது.
அலங்காரபூஜை மற்றும் மஹா தீபாராதனையை தொடர்ந்து, உமாமகேஸ்வர் உற்சவமூர்த்திகளுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன.
அதனை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன், வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரகாரத்தை வலம் வந்து அருள்பாலித்தனர்.ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தீபம் ஏற்றி வைத்து வழிபட்டனர்.
இதேபோல, எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர், சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவில், பழங்கரை பொன் சோழீஸ்வரர் கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி, லட்சுமி நகர் அருணாசலேஸ்வரர் கோவில் உட்பட அனைத்து சிவாலயங்களிலும் நேற்று சனி மஹா பிரதோஷ பூஜைகள் நடைபெற்றன. விரதம் இருந்து, பக்தர்கள் வழிபட்டனர்.